Sports
தர்மசாலாவில் நாளை முதல் ODI : தென்னாப்பிரிக்கா உடனான தொடரை வெல்லுமா இந்தியா? - மழை குறுக்கிட வாய்ப்பு?
தென்னாப்ரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா - தென்னாப்ரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நாளை நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
போட்டிக்காக இரு அணி வீரர்களும் தரம்சாலா வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணி வீரர்களைப் பொறுத்தவரை இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது. அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 0-3 என முழுமையாக இழந்து இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது. ஆகையால், சொந்த மண்ணில் தென்னாப்ரிக்காவுடனான இந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் நோக்கில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
மேலும், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். முக்கிய வீரர்களின் கம்பேக் அணியின் வெற்றிக்கு வித்திடுமா என்ற கேள்விக்கு நாளைய போட்டியில் பதில் தெரியும். இது ஒருபுறமிருக்க, தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீளாததால், தவானுடன் ப்ரித்வி ஷா தொடக்க வீரராக களமிறங்குவார்.
நியூசிலாந்து தொடரில் பெரிதும் சோபிக்காத கேப்டன் கோலி இந்தத் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய பேட்டிங் பட்டாளமும், ஜடேஜா, சஹால், புவனேஷ்வர் குமார், பும்ரா என இந்திய பந்துவீச்சு பட்டாளமும் தென்னாப்ரிக்காவை சுருட்டக் காத்திருக்கிறது.
அனுபவ வீரர்களின் கம்பேக், இளம் வீரர்களின் திறமை என ஒட்டுமொத்த பலன்களும் இணையும் பட்சத்தில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என நம்பலாம். தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை இளம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருக்கும் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
அண்மையில் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுமையாக வென்றது. ஆஸ்திரேலியாவுடனான வெற்றி, இந்திய தொடரிலும் தென்னாப்ரிக்காவுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அணி வீரர்கள் உள்ளனர்.
போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானத்தைப் பொறுத்தவரை சேசிங் செய்த அணியே முந்தைய போட்டிகளில் அதிக வெற்றியை பெற்றிருக்கிறது. ஆகையால், டாஸ் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பந்துவீச்சை தேர்வு செய்வர் என மைதான வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இரு அணி வீரர்களுக்கும் உச்சகட்ட மருத்துவ பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் சாதாரணமாக கைகுலுக்குவதையே தவிர்த்து விட்டதாகவும், போட்டியின்போது இன்னும் முன்னெச்சரிக்கையாக இருப்போம் எனவும் தென்னாப்ரிக்க தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் வீரர்களுடன் உரையாடுவதற்கும், செல்ஃபி எடுப்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போட்டி நடைபெறும் சமயத்தில் நாளை தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளைய போட்டி மழையால் தடைபடவும் வாய்ப்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!