Sports

T20 WorldCup : 5வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி!

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அரங்கேறியது. சுமார் 86,174 ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவிற்கும், ஆரவாரத்திற்கும் இடையே டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து போட்டியை தொடங்கியது.

தொடக்க வீராங்கனைகளாக Alyssa Healy, Beth Mooney சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு பந்தையும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய இந்த இணை, எதிரணியை திணற வைத்தது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

எப்படி போட்டாலும் விளாசுவோம் என்ற பாணியில் ஆடிய ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் எல்லைக்கு பந்தை பறக்கவிட்டது. ஃபீல்டிங்கில் இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணியின் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஆஸ்திரேலியா 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

75 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார் தொடக்க வீராங்கனை Alyssa Healy. மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனி 78 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து வந்த கேப்டன் மெக் லேனிங் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184ரன்கள் சேர்த்தது.

185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேசிங்கை தொடங்கியது இந்திய அணி. தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வெற்றி நெருக்கடியும் அவர் மீது இருந்தது.

ஷஃபாலி வெர்மா, மந்தனா தொடக்கம் கொடுக்க, Megan Schutt வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே இரண்டே ரன்கள் மட்டும் எடுத்து ஷஃபாலி வெர்மா ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வெர்மாவின் விக்கெட்டை தொடர்ந்து ஒன் டவுனில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் டானியா பாட்டியாவும் பந்து கழுத்து பகுதியில் பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.

ரோட்ரிகஸ் டக் அவுட் ஆகி வெளியேறியதுடன்,18 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாறியது. எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, இந்தியா தோல்வியை தழுவும் என முனுமுனுப்பு தொடங்கியது. அடுத்தடுத்து வந்த வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சில் விக்கெட்டை தாரை வார்த்தனர்.

அதிகபட்சமாக இந்திய அணியில் தீப்தி சர்மா 33 ரன்கள் சேர்த்தார். 19.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 5வது முறையாக டி20 அரங்கில் மகுடம் சூடி அசத்தியது.

ஆட்ட நாயகியாக அதிரடியாக ஆடி 75 ரன்கள் சேர்த்த Alyssa Healy-யும், தொடர் நாயகியாக பெத் மூனியும் தேர்வாகினர். முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை தவறவிட்டு ஏமாற்றமடைந்தாலும், இறுதிப்போட்டி வரை முன்னேறியதையடுத்து இதயங்களை வென்ற இந்திய வீராங்கனைகள் என கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.