Sports

4 ஆண்டுகளாக அசத்தி வரும் கோலி... 7 ஆண்டுகளாக தொடரும் ரோஹித்... போட்டி போட்டு சாதித்த இந்திய வீரர்கள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் இருவர் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 834 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் 22வது இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி 24வது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் பும்ரா (785) தனது நம்பர் 1 இடத்தை தக்கவைத்துக்கொண்டார். நியூசிலாந்தின் பவுல்ட் (740), ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் (707) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் (641) 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சாஹல் (620) தனது 15வது இடத்தில் நீடிக்கிறார்.

விராட் கோலி 2019ம் ஆண்டில் T20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துத் வகை போட்டிகளிலும் சேர்த்து 2,455 ரன்கள் சேர்த்து தொடர்ந்து 4வது முறையாக 2,000 ரன்களுக்கு மேல் காலண்டர் ஆண்டில் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும், தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா. அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அடித்த அதிகபட்ச ரன்கள் விபரம் பின்வருமாறு :

2013: ரோஹித் சர்மா (209)

2014: ரோஹித் சர்மா (264)

2015: ரோஹித் சர்மா (150)

2016: ரோஹித் சர்மா (171*)

2017: ரோஹித் சர்மா (208*)

2018: ரோஹித் சர்மா (162)

2019: ரோஹித் சர்மா (159)

இந்திய அணியின் கேப்டன் கோலியும், துணை கேப்டன் ரோஹித்தும் சாதனைகளோடு இந்த ஆண்டை நிறைவுசெய்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Also Read: “இன்னும் இரண்டே சதம்... சச்சினுக்கு அடுத்து நான்தான்” - கெத்து காட்டும் கோலி!