Sports
#INDvsBAN : இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்திய அணி - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்கதேச வீரர்கள் வெளியேறினர். இதனால் வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விராட் கோலியின் சதத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி முக்கிய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேச வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக நடையைக் கட்டினர். வங்கதேச அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகிய 3 பேரும் இணைந்து இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இரண்டாவது முறையாகும்.
இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 7-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதன்முறையாக ஒரு அணி, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!