Sports

''6 பால்ல 6 சிக்ஸ் அடிக்கலாம்னு தான் இருந்தேன்...ஆனால்'' - ரோஹித் சர்மா

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 100-வது டி20 போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா 43 பந்தில் 85 ரன்கள் விளாசினார். அதில் 6 சிக்ஸர்களும் , 6 பவுண்டரிகளும் அடக்கம்.

வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொசாடெக் ஹுசைனின் பந்தில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து அசத்தினார். மூன்று சிக்சர்கள் அடித்தபோது மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்தபின் யுஸ்வேந்திர சாஹலுடன் ரோஹித் சர்மா கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ''நான் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தபோது, மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்தேன். ஆனால், நான்காவது பந்தை நான் மிஸ் செய்தவுடன், அடுத்த பந்தில் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆஃப்-ஸ்பின்னர் பந்து வீசும்போது பந்து மிகப்பெரிய அளவில் திரும்பாது என்பது எனக்குத் தெரியும். அதனால் பந்து வரும்வரை க்ரீஸ் பகுதியில் நின்று பந்து விளாச முயற்சி செய்தேன்'' எனத் தெரிவித்தார்.

சிக்ஸர் அடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, சிக்ஸர் அடிப்பதற்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு தேவையில்லை. சிக்ஸர் அடிக்க பவர் தேவையில்லை, சரியான நேரத்தில் பந்தைத் அடிப்பதுதான் முக்கியம்.

பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட வேண்டும், உங்களின் தலைக்குமேல் பேட் செல்ல வேண்டும், சரியான இடத்தில் இருந்து அடிக்க வேண்டும். இவை மூன்றும் சரியாக இருந்தால் சிக்ஸர் அடிக்க முடியும்'' எனத் தெரிவித்தார்.