Sports

INDvSA : சாதனைகளை புரட்டிப்போட்ட ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால்! #CricStats

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 T20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினர்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதம் இதுவாகும்.

இந்திய அணி 59.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய ஆட்டம் ஆரம்பித்ததும் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். மயங்க் அகர்வால் 204 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வால் அடித்த முதல் சதம் இதுவாகும்.

பின்னர் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 244 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே தன் மீதான விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதிலடி கொடுத்தார். மேலும், இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.

மூன்று வகையான ஆட்டங்களிலும் 4 சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் எனும் சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் ரோஹித். இந்த சதத்தின் மூலம் சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து அசத்திய வீரர் என்ற டிராவிட்டின் சாதனையை ரோஹித் சமன் செய்தார்.

டிராவிட் கடந்த 1997 - 1998 இடைப்பட்ட காலத்தில் 6 அரைசதம் அடித்தார். இதே போல கடந்த 2016 - 2019* வரை ரோஹித் ஷர்மா தொடர்ந்து 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்

  • சேவாக் - 319

  • ரோஹித் - 176

  • சச்சின் - 169

இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காக 300 ரன்களுக்கு மேல் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமை பெற்றது. மேலும், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த சேவாக்- காம்பீர் ஜோடியின் சாதனையை தகர்த்தது.

அதிக ரன்கள் சேர்த்த இந்திய துவக்க ஜோடிகள் :

  • 413 வினோ மான்கட் - ராய், எதிர்- நியூசி ., 1955/56

  • 410 சேவாக் - டிராவிட், எதிர்- பாக்., 2005/06

  • 317 மயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா, எதிர் - தென் ஆப்ரிக்கா, 2019

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய துவக்க ஜோடி :

  • 317 மயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா, 2019

  • 218 சேவாக் - காம்பீர் , 2004/05

  • 213 சேவாக் - வாசிம் ஜாபர் 2007/08

தவிர , தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டிலும் அதிக பார்ட்னர்ஷிப் கொடுத்த சாதனையையும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி செய்துள்ளது.

  • 317 மயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா, 2019 (முதல் விக்கெட்)

  • 268 சேவாக்- டிராவிட் 2007/08 (இரண்டாவது விக்கெட்)

  • 259* லட்சுமண் - தோனி 2009/10 (7வது விக்கெட்)

  • 249 சேவாக் - சச்சின் 2009/10 (3வது விக்கெட்)

துவக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வினோதமான சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

அது யாதெனில் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக களமிறங்காத வீரர்கள் இருவர் துவக்க வீரராக களமிறங்குவது 47 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை ஆகும்.

முதல்முறையாக துவக்க ஜோடியாக களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்தவர்கள்:

  • 410 - சேவாக் -டிராவிட், 2006

  • 317 - ரோஹித் -மயங்க் , 2019

  • 289 - விஜய் -தவான், 2013

  • 276 - டெம்ப்ஸ்டர் - மில்ஸ், 1930

  • 260 - மிட்செல் - சிடில், 1931

  • 254 - கெயில் - பாவெல், 2012

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இணைந்து 9 சிக்ஸர் அடித்துள்ளனர். ரோஹித் 6 சிக்சரும், மயங்க் 3 சிக்சரும் அடித்துள்ளனர்.இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இணைந்து 8 சிக்சருக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.