Sports

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டமா? விசாரணையை முடுக்கிவிட்டது பி.சி.சி.ஐ.!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் T20 தொடர் 2016ம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எல் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் தமிழக வீரர்களும், இந்திய அணியின் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இத்தொடரின் போது வீரர்களை, அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் சூதாட்ட ஈடுபடுத்த முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஒரு அணியின் பயிற்சியாளருக்கும் இதில் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங், ''சில வீரர்களிடம் செல்போன் மூலம் சூதாட்டத்துக்கு தேவையான தகவல்களை மர்மநபர் செல்போன் மூலம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

சூதாட்டத்திற்கு அணுகிய நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அந்த நபர், முதலில் பேட்டிங் செய்யப்போவது யார் என போட்டி குறித்து விவரங்களை கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். வீரர்களுக்கு ஏற்கனவே ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் வீரர்கள் எங்களை அணுகலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டி.என்.பி.எல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''டி.என்.பி.எல் தொடரில் சூதாட்டத்திற்கு எந்தவித இடமும் அளித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறோம். சூதாட்ட புகார் எழுந்ததும் உடனடியாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு விசாரணை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டி கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. போட்டியின் நேர்மை மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.