Sports
கோலி சொன்னது நடந்தது - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு!
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. புதிய பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, அவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பி.சி.சி.ஐ. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பேர் பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
அந்த பட்டியலில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஃஅபில் சிம்மன்ஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி, ஆகியோர் இந்த பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.
பயிற்சியாளரைத் தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கெய்க்வாட், ரங்கசாமி ஆகிய மூவர் அடங்கிய தேர்வு குழு நியமிக்கப்பட்டது. இன்று மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக் குழு, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் அறிவித்தது. அணியின் சாதக பாதகங்களை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
கிரிக்கெட் பற்றிய அறிவு, திறமை, சாதனை அடிப்படையில் ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதாகவும், பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்துடன் ரவிசாஸ்திரியை தேர்வு செய்ததாக கபில்தேவ் தெரிவித்தார்.
2021ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவியேற்ற பிறகு, இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடம், ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது என சிறப்பாகவே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலகக் கோப்பை தோல்வியை அடுத்து அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இருந்த போதும், இந்திய கேப்டன் விராட் கோலியின், ஆதரவு ரவி சாஸ்திரிக்கே இருந்தது. கோலியின் கருத்தும், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட முக்கியக் காரணம் என்பது மறுப்பதற்கில்லை.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?