Sports

தோனி ஒரு ராணுவத்திற்கு சமம், அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை : ராணுவ தளபதி உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வின்போது ராணுவ பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடவுள்ளார். வரும் ஜூலை 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவர் இந்த படைப்பிரிவுடன் இணைந்து ராணுவ சேவையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் எல்லையில் இருக்கும் தோனிக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், நாங்கள் தோனியை பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. அவர் தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்படுகிறார். குடி மக்களையும், பாதுகாப்பு படை வீரர்களையும் அவர் பாதுகாப்பார் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “அவருக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நாங்கள் என்றுமே நினைக்கவில்லை. அவர் மக்களைக் காக்கும் பணியை செய்து, கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடிப்பார்” என்றார்.மேலும், ராணுவத்தில் அவரின் கடமையை செய்ய நன்கு ஆயுத்தமாகியுள்ளார் தோனி. மற்ற வீரர்கள் போலவே, பாதுகாவலராக தோனி தன்னுடைய பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தோனிக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து பல்வேறு விதமான மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.