Sports
‘அந்த ஓவர் த்ரோவுக்கு ரன் வழங்கியது தவறுதான்.. ஆனால், அதற்காக வருந்தமாட்டேன்’ - சர்ச்சை அம்பயர் தர்மசேனா
2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது 50வது ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்டார். இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் பந்தை கீப்பரிடம் எறிந்தார். கப்தில் எறிந்த பந்து கிரீசுக்குள் நுழைய டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பவுண்டரிக்கு சென்றது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 + 4 என 6 ரன்கள் வழங்கப்பட்டன ( ஓடியதற்கு 2 ரன்கள் + பவுண்டரி 4 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.
அந்த ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறு என்று முன்னாள் நடுவர் சைமன் டௌபல் கூறியிருந்தார். இந்நிலையில், அந்த முடிவினை வழங்கிய இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார தர்மசேனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “டி.வி ரீப்ளேக்களைப் பார்த்த பிறகு மக்கள் கருத்து தெரிவிப்பது எளிது. இப்போது டிவி ரீப்ளேக்களில் அதைப் பார்க்கும்போது அது ஒரு தவறான முடிவு தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
உடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. பேட்ஸ்மேன் அடித்த உடன் பந்து எங்கே செல்கிறது? எப்படி பீல்டிங் செய்கிறார்கள்? அதற்குள் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் ஓடுகிறார்கள்? என அனைத்தையும் கணிக்க வேண்டும்.
இந்த நிலையில் அப்படி ஒரு தவறு ஏற்பட்டு விட்டது. நான் எடுத்த முடிவுக்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். மேலும் ஐ.சி.சி அப்படி ஒரு முடிவினை கொடுத்ததற்கு என்னை பாராட்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதை மூன்றாவது நடுவருக்கு எடுத்து செல்வதற்கு விதிகளில் இடமில்லை. எனவே களத்தில் இருந்த மற்றோரு நடுவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவை எடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஓவர்த்ரோவிற்கு கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்பதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?