Sports

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி மட்டுமே சிறந்த கேப்டன் இல்லை : சர்ச்சையைக் கிளப்பும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகிறது.

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தகவல்கள் வலம் வருகின்றன.

இந்நிலையில், 2023 உலககோப்பைக்கு முன்னர் தோனிக்குப் பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்தவற்கான முக்கியமான நேரம் இது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய கம்பீர், “எதிர்காலத்தைக் கருத்தில் கொள்வது முக்கியம். தோனி கேப்டனாக இருக்கும்போது, வருங்காலத்தைப் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் வைத்து தோனி என்ன சொன்னார் என்பது நான் உங்களுக்கு நியாபகப்படுத்துகிறேன். நான், சச்சின், சேவாக் ஆகியோர் ‘CB Series’ தொடரில் இணைந்து விளையாட முடியாது.

மைதானங்கள் பெரியதாக இருப்பதால் பீல்டிங் செய்ய இயலாது என்று கூறினார். அவர் 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எங்கள் மூவருக்கும் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி வருகிறார் என்பதை வெளிப்படுத்தத்தான் அவ்வாறு கூறினார். எமோசனல் ஆவதை விட செய்முறை முடிவுகளை எடுப்பது அவசியம்.

தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ? அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும்.

ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த நபரை தேர்வு செய்யலாம். அப்படி செய்தால் அடுத்த உலகக்கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்து விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது புள்ளிவிவரத்தை பார்த்தால் அவர் சிறந்த கேப்டன் என்று தெரியும். ஆம் உண்மையில் அவர் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்றுள்ளார். ஆனால், வெளிநாடுகளில் விராட் கோலி வெற்றி பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அவர் தொடர்களை வென்றுள்ளார்.

மேலும் அணில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இங்கிலாந்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தோனியை விட சிறப்பாக செயல்பட்டனர் எப்படிப் பார்த்தாலும் தோனி மட்டுமே சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.