Sports
அயர்லாந்து மோர்கன்..நியூசிலாந்து ஸ்டோக்ஸ்..வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சர் : அப்போ ஜெயிச்சது இங்கிலாந்து இல்லையா?
2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை போல ஒரு இறுதிப்போட்டி உலகக் கோப்பையில் இடம்பெறவில்லை என்று கூறுமளவுக்கு சுவாரஸ்ய தருணங்களால் நிரம்பி வழிந்தது இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி.
இதுவரை உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் ஒரு க்ளாஸிக்கான வெற்றித்தருணமாக பார்க்கப்பட்டது தோனியின் 2011 சிக்ஸர்தான். ஆனால் நேற்றைய போட்டியில் அதனை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்து ஆடுகளங்களில் 500 ரன்கள் எல்லாம் சாத்தியம் என்று கூறிய விஷயத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி என்று நிரூபித்துள்ளது 2019 உலகக் கோப்பை.
இங்கிலாந்தின் தனி ஒருவனாக பென் ஸ்டோக்ஸ் மூச்சிறைக்க ஓடி சேர்த்த 84+8(சூப்பர் ஓவர் ரன்கள்) ரன்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் மறக்க முடியாத இன்னிங்ஸாக இடம்பெற்றுள்ளது.
50வது ஓவரில் நான்காவது பந்தில் இரண்டு ரன் ஓடிய போது கப்தில் வீசிய ரன் அவுட்டுக்கான த்ரோ ஸ்டோக்ஸ் மீது பட்டு பவுண்டரி சென்றது. அதுதான் நியூசிலாந்தின் தோல்விக்கு முதல் விதை. ஆட்டம் முடிந்ததும் பென் ஸ்டோக்ஸ் இந்த பந்துக்காக நான் காலத்துக்கும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்றார். இது வேண்டுமென்றே செய்ததல்ல என்பதை உலகமே அறியும். இப்படிப் பேசி நெகிழ வைத்த பென் ஸ்டோக்ஸ் பிறப்பால் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்.
ஆட்டம் டையில் முடிந்தது. மீண்டும் சூப்பர் ஓவரில் 16 ரன்களை இலக்காக நிர்ணயிக்கிறது இங்கிலாந்து. இந்த இலக்கை எட்டவிடாமல் பந்து வீச வேண்டியது ஆர்ச்சரின் கடமை. உலகக் கோப்பைக்காக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரின் பெயர் இல்லை. கடைசியாகத்தான் ஆர்ச்சர் இணைக்கப்பட்டார். 2 பந்து 3 ரன்கள் இலக்கு எனும் நேரத்தில் லாவகமாக வீசி இங்கிலாந்துக்கு வெற்றியை பரிசளித்த ஆர்ச்சர் பிறப்பால் மேற்கிந்திய தீவுகள் நாட்டை சேர்ந்தவர்.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு, 44 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தேசம். இங்கிலாந்து இன்று உலகக் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் பிறந்தவரான இயான் மோர்கன் தலைமையில் தான் இந்த கோப்பையை முதன்முதலாக வென்றுள்ளது.
தனது சுழற்பந்துவீச்சால் ஆசிய அணிகளை மிரட்டிய அதில் ரஷித், பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய மொயின் அலி இருவரும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள். அதிரடியாய் ஆடி ஆஸ்திரேலியாவை கதறவிட்ட ராய் தென்னாப்பிரிக்காவை சொந்த நாடாகக் கொண்டவர்.
இப்படி இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் 7 பேர் வேற்று நாட்டவர். அணியாக கோப்பையை இங்கிலாந்து வென்றாலும், உணர்வால் இங்கிலாந்து உலக நாடுகளின் அணி..! வாழ்த்துக்கள் இங்கிலாந்து!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!