Sports
0 ரன் வித்தியாசத்தில் உலகக்கோப்பையை முத்தமிட்ட இங்கிலாந்து : சர்ச்சைக்குரிய’ சூப்பர் ஓவர்’ ரூல்ஸ்!
இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன.
ஸ்டோக்ஸ் கைகொடுக்க, கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. இதில் மார்க் உட் (0) ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எட்டியதால், போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. 'சூப்பர் ஓவரில்' நியூசிலாந்து சார்பில் போல்ட் பந்துவீசினார். பட்லர், ஸ்டோக்ஸ் கைகொடுக்க இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆர்ச்சர் பவுலிங் செய்தார். கப்தில், ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்தனர். நீஷம் சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் கப்தில் ரன் அவுட்டானார். இரு அணிகளும் ஒரே ஸ்கோரை (15) மீண்டும் எட்டின. ஆனால், இப்போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த (சூப்பர் ஓவர் உட்பட 26) அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம், கிரிக்கெட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நியூசிலாந்து அணி ஃபைனலில் வீழ்ந்தது.
‘டை’ ஆகி, சூப்பர் ஓவரிலும் ‘டை’ ஆன இந்த ஆட்டத்தை பவுண்டரிகளைக் கணக்கிட்டு வெற்றியை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க முறை அல்ல என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறைவான விக்கெட்டை இழந்தவர்களே வெற்றி பெறவேண்டியவர்கள் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
சூப்பர் ஓவருக்கான விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
* ஆடும் லெவன் அணியிலிருப்பவர்களே சூப்பர் ஓவரிலும் களமிறங்க முடியும். ஒரு அணிக்கு பேட்டிங் செய்ய மூவருக்கும், பந்து வீச ஒருவருக்கும் அனுமதி உண்டு.
* இரண்டாவதாக பேட் செய்திருக்கும் அணி சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட் செய்யக் களமிறங்கும்.
* ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய அணி சூப்பர் ஓவரிலும் பந்துவீச வேண்டும்.
*சூப்பர் ஓவர் எனப்படும் ஒரு கூடுதல் ஓவரில் அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
* சூப்பர் ஓவரில் ஒரு அணிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே அளிக்கப்படும்.
* சம ரன்களோடு சூப்பர் ஓவரும் டை ஆனால், மேட்ச்சில் அதிக பவுண்டரிகள் அடித்திருக்கும் அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
இந்த விதியின் அடிப்படையில் தான் ஆட்டமும், சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனாலும், இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!