Sports
நேற்று தோனி..இன்று கோலி.. ஆனால், விதை கங்குலி போட்டது! :ஜூலை 13ம், லார்ட்ஸ் மைதான பால்கனியும் - flashback
இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டியில் தோனி ரன் அவுட் ஆன போது ஒட்டுமொத்த இந்தியாவின் இதயமும் நொறுங்கியது. அப்போது ஆங்கில வர்ணனையை யாரவது கேட்டிருந்தால் தெரிந்திருக்கும். அதற்கு முந்தைய ஓவரில் கங்குலியின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“ இது தோனியின் ஆட்டம் இந்த ஆட்டம் வெற்றிக்கு இந்தியாவை அழைத்து செல்கிறது. இந்த பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தது. அடுத்த ஓவரை எதிர்கொள்ளத்தான். இதோ சிக்ஸர் தோனி இந்தியாவின் இறுதிப்போட்டி கனவை நிஜமாக்கி கொண்டிருக்கிறார்” என கிட்டத்தட்ட இந்திய அணியின் கேப்டனாகவே பெவிலியனில் அமர்ந்து பேசுவதைப்போல பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால், தோனியின் ரன் அவுட்டுக்கு பிறகு கங்குலியின் குரல் கேட்கவே இல்லை. மிகவும் மனமுடைந்தே இருந்தார். இளம் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற கேப்டன் கங்குலி. அவர் மனதில் ஜூலை 14 இன்னொரு லார்ட்ஸ் பால்கனி நிகழ்வு கனவாய் இருந்திருக்கலாம்.
ஆம், 2002, ஜூலை 13ம் தேதி வழக்கமான மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதான் அன்றும் நடந்தது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 13ம் தேதி நடந்தது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். இந்திய அணி வெளிநாடுகளில் பொட்டிப்பாம்பாய் அடங்கிவிடும் என்ற அடையாளத்திலிருந்து வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் இந்திய ரசிகர்கள். கோப்பை நமக்கு தான் என ஆர்பரித்த ரசிகர்களுக்கு கவலை அளித்தனர். அப்போதைய கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் 30 ஓவர்கள் ஆடிய அவர்கள் 180 ரன்களுக்கு மேல் பட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர், இருவரும் சதமடிக்க பிளின்டாப்பின் அதிரடியான 40 ரன்கள் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.
ஒப்பனர்களாக களமிறங்கிய சேவாக்கும், கங்குலியும் ஆரம்பத்தில் அடித்து ஆடினர். 14.3 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. முதலாவது விக்கெட்டாக கங்குலி வீழ்ந்தார். அடுத்த 40 ரன்களை குவிப்பதற்குள் இந்திய அணி சேவாக், டிராவிட், சச்சினை இழந்தது. சச்சின் ஆட்டமிழந்தவுடன் டிவியை அணைத்துவிட்டு தூங்க சென்றவர்கள் அதிகம்.
ஆனால், அவர்களுக்குத்தான் நிஜத்தில் அதிர்ஷ்டமில்லை. அதன் பின் நடந்ததுதான் வரலாறு. மறுநாள் காலை செய்திகளை படித்த பின்னர், ரீடெலிகாஸ்ட்டையும், ஹைலைட்ஸையும் பார்த்தவர்கள் அதிகம்.
யுவராஜ் சிங், முகமது கைப் இந்த இரண்டு வீரர்கள் அவ்வளவாக இந்திய அணியில் பெரிதும் பேசப்படாத வீரர்கள். களமிறங்கியபோது இந்தியா 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 180 ரன்கள் குவிக்க வேண்டும். கடைசியாக கையில் இருப்பது 5 விக்கெட்டுகள். இந்தியாவின் இறுதிப்போட்டி தோல்வி தொடரப்போகிறது என்று பார்த்தால் இவர்கள் இருவரும் இணைந்து 121 ரன்கள் பாட்னர்ஷிப். யுவராஜ் அவுட் ஆக மீண்டும் ஆட்டம் இங்கிலாந்து வசம் திரும்பியது.
48வது ஓவரில் ஹர்பஜன், கும்ப்ளே அவுட் ஆகும்போது அணியின் ஸ்கோர் 314 இன்னும் 12 ரன்கள்தான் என்றாலும் 2 விக்கெட்டுகள் விழுந்தால் இந்திய அணி அவ்வளவுதான் என்ற நிலை. கடைசி ஓவரில் த்ரில் அதிகரித்தது. எதிர் முனையில்தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கைப் இருந்தார். பந்தை ஜாகிர் கான் எதிர்கொண்டார், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா என்ற பயம். இங்கிலாந்து வீரர்கள் ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டதும் இன்றி ஓவர் த்ரோ ஆக இந்திய வீரர்கள் ஓடியே ரன்களை எடுத்தனர். வெற்றி ரன்களை 3 பந்துகள் மீதமிருக்கையில் சுவைத்தனர்.
அடுத்த நொடி அனைவரது பார்வையும் வீரர்களையும் ஆடுகளத்தையும் தாண்டி லார்ட்ஸ் பால்கனிக்கு திரும்பியது. அனைவரது கண்களிலும் ஆச்சர்யம். ஆம் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தன் டி ஷர்ட்டை கழட்டி சுற்றியபடி வெற்றியை கொண்டாடினார். இதுவரை லார்ட்ஸ் மைதான பால்கனியின் அழிக்க முடியாத அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது.
அந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இந்திய அணி புத்துயிர் பெற்றது. இன்று எல்லாம் தலைகீழான நிலை இங்கிலாந்தில் தோனி சாம்பியன் கோப்பையை வெல்கிறார்.. கோலி உலகக் கோப்பையில் இந்தியாவை அரையிறுதி வரை அழைத்து செல்கிறார்... ஆனால், இதற்கெல்லாம் விதை கங்குலி போட்டது. அதுவும் லார்ட்ஸ் பால்கனியில் இதே நாளில் நடந்த அந்த மேஜிக் தான் காரணம்... ஜூலை 13ம் தேதியை இந்தியாவும், லார்ட்ஸ் பால்கனியும் மறக்காது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!