Sports

‘நோ பாலில்’ ரன் அவுட் ஆக்கப்பட்டாரா தோனி? - கொதிக்கும் இந்திய ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய உலகக் கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நோ பால்' ஆகியிருக்க வேண்டியது. அதனை நடுவர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வரிசையாக இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக தாங்கிப் பிடித்து நம்பிக்கை கொடுத்தனர். முக்கியமான தருணத்தில் ஜடேஜாவும் அவுட் ஆக, தனி ஆளாக போராட தோனி தயாரானார். அதற்கேற்றாற்போல, 49-வது ஓவரின் முதல் பந்தில் அருமையான சிக்சர் ஒன்றையும் விளாசினார்.

துரதிர்ஷ்டவசமாக 49வது ஓவரின் 3வது பந்தில் 2 ரன்னுக்கு ஓட ஆசைப்பட்ட தோனி, ரன் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்திய ரசிகர்களையும் ஏமாற்றிய அந்த ரன்அவுட் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு தகர்ந்துபோகக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தோனி ரன் அவுட் ஆன பந்து 'நோ பால்' என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 3வது பவர் பிளே ஓவர்களான, 40-50 ஓவர்களில் '30 மீட்டர்' வட்டத்திற்கு வெளியே, 5 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்களை நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லிம்சன் நிறுத்தியிருந்தார்.

ஐ.சி.சி விதிப்படி, அதை நோ பால் என அம்பயர்கள் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதை நடுவர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. 'நோ பால்' சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

எந்தவொரு பந்திலும் ரன் அவுட் ஆனது ஏற்றுக்கொள்ளப்படும் என்பது பிரச்னை அல்ல. கப்தில் வட்டத்திற்குள் ஃபீல்டராக இருந்திருந்தால் தோனி 2-வது ரன்னுக்கு ஓடியிருக்கமாட்டார். ரன் அவுட்டும் ஆகியிருக்க மாட்டார் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் ஆதங்கம்.