Sports

சதத்தில் சாதனை படைத்த ‘ஹிட் மேன்’ ரோஹித்!

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. பர்மிங்காமில் நடந்துவரும் இன்றைய லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணியின் துவக்க வீரராகக் களமிறங்கிய துணை கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார். இன்றைய ஆட்டத்தில் 90 பந்துகளில் சதம் அடித்தார் ரோஹித். இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும். சதம் அடித்த ரோஹித் 104 ரன்களில் அவுட்டானார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 சதங்களை அடித்துள்ளார் ரோஹித் சர்மா. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக சதங்கள் (4 சதம்) அடித்த இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

வங்கதேச பவுலர்களின் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் மூன்றாவது சிக்ஸரை அடித்தது இத்தொடரில் அடிக்கப்பட்ட 300-வது சிக்சராக அமைந்தது. அதோடு, உலகக்கோப்பை தொடரில் 300 சிக்சர் அடிக்கப்பட்ட மூன்றாவது தொடராகவும் இது அமைந்தது. அதிகபட்சமாக கடந்த 2015-ல் நடந்த உலகக்கோப்பை தொடரில் 463 சிக்சர்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.