Sports

உலகக்கோப்பை 2019 : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

12-வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. அதேபோல, இந்திய அணியும் விளையாடிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

தொடக்க வீரர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவான் நாளைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். இதனால் 4வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் களமிறக்கப்படலாம் .

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, டோனி, ராகுல் ஆகியோர் பார்மில் உள்ளனர். இதேபோல பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக வீசி வருகிறார்கள்.

இந்தியா உத்தேச அணி : விராத் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர்/தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், காலின் மன்ரோ, கப்தில் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரும், பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அந்த அணி

நியூசிலாந்து உத்தேச அணி : கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லாதம், கோலின் கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், லோகி பெர்குசன், மேட் ஹென்றி, .

இரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 55 ஆட்டங்களில் இந்தியாவும், 45 ஆட்டங்களில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது, 5 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பொருத்தவரை இவ்விரு அணிளும், இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில், இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.