Sports
சேப்பாக்கம் தந்த நம்பிக்கை... நாட்வெஸ்ட் சேஸிங் - கிரிக்கெட்டின் ‘ஃபீனிக்ஸ்’ யுவராஜ்!
சமீபத்தில் வெளியான தோனியின் பயோபிக்கில் ஒரு காட்சி இருக்கும். நண்பர்கள் தோனியிடம் கேட்பார்கள், “அந்த உள்ளூர் போட்டியை எப்படி தோற்றீர்கள்” என, அதற்கு தோனி, “நாங்கள் எப்போது யுவராஜ் சிங்கை மைதானத்துக்கு வெளியே பார்த்தோமோ அப்போதே தோற்றுவிட்டோம்” என்பார். யுவராஜ் சிங் - இந்தப் பெயர் இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஒரு மனிதனுக்கு கம்பேக் என்பது ஒருமுறை இருக்கலாம் அல்லது இருமுறை இருக்கலாம். மூன்றாவது முறை தோற்றால் அவன் சோர்ந்துவிடுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அதே உற்சாகம்... அதே வேகம்... என தன்னை நிரூபிக்கும் யுவராஜ் சிங் ஆச்சர்யமளிப்பவர். அதனால் தான் என்னவோ அவரது சுயசரிதை புத்தகத்தின் பெயர் ''YOU WE CAN''. தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யுவராஜின் 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.
விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த யுவிதான், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தொடர்நாயகன். 2002-ம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை பரிசளித்து கங்குலியின் லார்ட்ஸ் கர்ஜனைக்கு காரணமானவர். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன் இப்படி இந்திய சரித்திர நிகழ்வுகளில் கட்டாயம் இடம்பெறும் பெயராக இருந்துள்ளார் யுவி.
2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் ப்ராட் மைதானத்திலேயே அழுதார். ஒரு பந்துவீச்சாளரின் மனநிலையை நிலைகுலையச் செய்வதில் யுவி ஒரு மாஸ்டர்.
நுரையீரல் புற்றுநோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் என கூறியவர்கள், பின்னர் அவரைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். யுவராஜ், கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இனி பார்வையாளர்தான் என்ற கருத்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டவர் யுவி.
சிறுவயதில் யுவிக்கு ஸ்கேட்டிங் என்றால் கொள்ளைப் பிரியம். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்றவர். தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் போல யுவியும் பல விளையாட்டுகளில் பன்முகத் திறமை கொண்டவர். அவரது தந்தை, 'நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!' என வலுக்கட்டாயமாக கிரிக்கெட்டுக்குள் நுழைத்தார். அதிலும் கில்லி என நிரூபித்தார் யுவி.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பே யுவராஜை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அது தெரியாமலேயே களமிறங்கினார் யுவி. லீக் ஆட்டங்களின் போதே அவருக்கு தனக்குள் ஏதோ பிரச்னை என்பது புரிந்தது. எனினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. புற்றுநோய் உள்ளேயிருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. எனினும் அவர் ஆட்டத்தில் சோடை போகவில்லை. யுவிதான் அந்த உலகக் கோப்பையை நமக்கு பெற்றும் தந்தார். 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனாகவும் வலம் வந்தார்.
போட்டி முடிந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கிரிக்கெட் உலகம் யுவிக்காக பிரார்த்னையில் ஈடுபடத் தொடங்கியது. யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் கிரிக்கெட் மீதான காதல்தான் மீண்டும் அவரை மைதானத்திற்கு அழைத்து வந்தது.
புற்றுநோயில் இருந்து மீண்டு அவர் அணியில் இடம் பெற்றபோது, அவர் மீதுள்ள கரிசனத்தால் எடுத்துள்ளனர் என சொல்ல ஆரம்பித்தனர். அப்படி சொன்னவர்களுக்கெல்லாம் யுவராஜின் பேட் தக்க பதில் அளித்தது.
புற்றுநோயில் இருந்து குணமான பிறகு யுவி, முதல் ஆட்டத்தில் இறங்கியது சென்னையில்தான். களத்திற்கு யுவி வரும்போது சென்னை சேப்பாக்கமே எழுந்து நின்று வரவேற்றது. “யுவி... யுவி” என ஆர்ப்பரித்தது. அந்தப் போட்டியில் யுவியின் 'ரீ-என்ட்ரி', சிக்சருடன்தான் தொடங்கியது. இப்போதும் யுவி ' சேப்பாக்கம் தந்த உற்சாகம்தான் தன்னை கிரிக்கெட் உலகில் மீண்டும் உலாவ வைத்துள்ளது' என நன்றியுடன் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனாலும் எல்லா கிரிக்கெட்டர்களுக்கு வரும் ஃபார்ம் அவுட், யுவிக்கும் வந்தது. விளைவு, அணியில் இருந்து கொஞ்ச நாள் ஓரம் கட்டப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த 2015-ம் ஆண்டு முழுவதுமே அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மீண்டும் அணியில் இடம்... 2016ம் ஆண்டு மீண்டும் காணாமல் போகிறார். 2017 சாம்பியன் கோப்பையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை துவம்சம் செய்தார்.
304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 சதங்களுடன் 8701 ரன்களை குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்களையும், 58 டி20 போட்டிகளில் 1177 ரன்களையும் குவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடாமல் இந்த முறை மும்பை அணிக்கு அடிப்படை விலைக்கு எடுக்கப்பட்ட யுவராஜ் சிங் அசராமல் வந்து 35 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.
யுவராஜ் ஓய்வை அறிவித்துவிட்டார் இனி யுவராஜை மைதானத்தில் பார்ப்பது கடினம். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...
ஆனால் இதற்கு யுவி வாய்ப்பளிக்க மாட்டார். மீண்டும் திரும்ப ஏதாவதொரு வடிவில் கிரிக்கெட்டில் யுவியை பார்க்கலாம். யுவராஜ் கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை. மீண்டும் மீண்டும் கிரிக்கெட் உலகை ஆக்கிரமிப்பார்... வாழ்த்துக்கள் யுவி..!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!