Sports

உலகக்கோப்பை 2019 : நியூசிலாந்தை கட்டுப்படுத்துமா இலங்கை !

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) கார்டிப்பில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

சமீப காலங்களாக இலங்கை அணியின் செயல்பாடு சிறப்பாக அமையவில்லை. கடைசியாக விளையாடிய 9 ஒரு நாள் போட்டியில் 8-ல் தோல்வியை சந்தித்தது. உலக கோப்பையின் பயிற்சி ஆட்டங்களிலும் இலங்கை அணி முறையே தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்டது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட இலங்கை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கைப் பொருத்தவரை மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகியோரும் பவுலிங்கைப் பொருத்தவரை டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோரும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. காயத்தால் அவதிப்பட்டு வரும் டாம் லாதம் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

கார்டிப் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குபோட்டி தொடங்குகிறது.

இன்றைய போட்டிக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் :-

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), திரிமன்னே, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே.