Sports

தோனியை குறைகூறினேனா? - குல்தீப் யாதவ் மறுப்பு!

கிரிக்கெட்டின் கடவுளாக முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருதப்பட்டாலும், ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள தாரகச் சொல் மகேந்திர சிங் தோனி.

ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்தாலும், சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் தோனி பணியாற்றி வருகிறார்.

இருந்தபோதிலும், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலிக்கும், மற்ற அணி வீரர்களுக்கும் களத்தில் அதிக அறிவுரைகளை வழங்கி வருவதை தோனி வழக்கமாகவே கொண்டுள்ளார்.

தோனியின் அறிவுரைகள் இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சக வீரர்கள் தெரிவித்து வருவதும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதும் வழக்கம்.

இப்படி இருக்கையில், தோனி அளிக்கும் அறிவுரைகள் பல சமயங்களில் தவறாகவே முடிந்துள்ளது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பேசியதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக மும்பையில் சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேசிய குல்தீப் யாதவ், தோனியின் அறிவுரைகள் அதிக முறை தவறாகவே முடிந்துள்ளதாகவும், ஆனால், அதனை அவரிடம் தெரிவிக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

மேலும், தோனி அதிகம் பேசமாட்டார் என்று கூறிய குல்தீப், களத்தில் தேவைப்படும்போது முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்கவேண்டும் என்றால் மட்டுமே வந்து சொல்வார் என்றும் தெரிவித்தார்.

இந்ந நிலையில், தோனி குறித்து தான் ஏதும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்து குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் குல்தீப், எவ்வித காரணங்களும் இல்லாமல் வதந்திகளை மட்டுமே விரும்பும் ஊடகங்கள் தற்போது புது வதந்தி ஒன்றையும் கிளப்பியுள்ளது என்றும், தோனி குறித்தும் அவரது அறிவுரைகள் குறித்து நான் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், தோனி மீது தனக்கு அதீத மரியாதை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் பதிவு: