Sports
IPL 2019 : மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயத்தால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சித்தேஷ் லாட் களமிறங்கினார். ரோஹித் சர்மாவுக்கு பதில் கீரன் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்ய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. கெயில் , ராகுல் களமிறங்கி வலுவான அடித்தளத்தை முதல் விக்கெட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். கெயில் 31 பந்துகளிலும், ராகுல் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், கெயில் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. 13-வது ஓவரில் இருந்து 17-வது ஓவர்கள் வரை 30 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்தது.
மில்லர்(7), நாயர்(5), சாம் கரண்(8) ரன்களில் விரைவாக வெளியேறினார்கள். ஒருமுனையில் , விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் மறுமுனையில் ராகுல் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் ஐ.பி.எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். மன்தீப் சிங் 7 ரன்களிலும், ராகுல் 100 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசிய 57 ரன்கள் வாரிக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடுதான் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. லாட், டீ காக் இன்னிங்ஸை தொடங்கினார்கள். முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி அடித்து லாட் அசத்தினார். ராஜ்புத் வீசிய 3-வது ஓவரில் டீ காக் 2 பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார். ஷமி வீசிய 4-வது ஓவரில் லாட் 15 ரன்கள் சேர்த்த நிலையில், அவுட்டாகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ராஜ்புத் வீசிய 5-வது ஓவரில் யாதவ் 3 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார். இந்த ஓவரில் கைக்கு கிடைத்த கேட்சை மில்லர் நழுவவிட்டார்.
சாம் கரன் வீசிய பந்தில் ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். அஸ்வின் வீசிய 9-வது ஓவரில் டீ காக் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்த பந்தை மில்லர் ஓடிவந்து லாவகமாக கேட்ச் பிடித்தார். டீ காக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின் வீசிய 11-வது ஓவரில் கிஷான் ஒரு பவுண்டரி அடிக்க, பொலார்ட் ஒரு சிக்ஸர் விளாசினார். கரண் வீசிய 12-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கிஷான் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, பொலார்டுடன் இணைந்தார். அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டிரியும், பொலார்ட் இரு சிக்ஸர்களையும் விளாசினார்கள். கடைசி 5 ஓவர்களுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி 16-வது ஓவரை வீசினார். ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த குர்னல் பாண்டியாவும் நிலைக்கவில்லை, ஒரு ரன் சேர்த்த நிலையில் அதே ஓவரின் 4-வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அல்சாரி ஜோசப் வந்து, பொலார்டுடன் சேர்ந்தார். சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் பொலார்ட். 18-வது ஓவரை ஷமி வீசி 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து நெருக்கடியே ஏற்படுத்தினார்.
கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கரண் வீசினார். இந்த ஓவரின் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் 17 ரன்கள் விளாசினார் பொலார்ட். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ராஜ்புத் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்து நோபாலாக மாற, அதை பொலார்ட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி விளாச ஆட்டம் பெரும் பரபரப்பு நிலைக்கு வந்தது.
வெற்றிக்கு 4 ரன்கள் தேவை, கைவசம் 5 பந்துகள் இருந்தன. 2-வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து பொலார்ட் 83 ரன்களில் வெளியே ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அடுத்து சாஹர் களமிறங்கி, ஜோசப்புடன் சேர்ந்தார். முதல் பந்தில் ஜோசப் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4-வது பந்தில் ஜோசப் ஒரு ரன்னும், 5-வது பந்தில் சாஹர் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஃபுல்டாசாக வீசப்பட்ட பந்தை ஜோசப் லெக் திசையில் அடித்து 2 ரன்கள் ஓட, வெற்றி மும்பை பக்கம் சென்றது.
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!