Politics

“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!

சென்னை இராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவ.22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசியது வருமாறு :

அதானி குடும்பத்திற்கு பத்தாண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு கொடுக்கும் சலுகைகள் ஏராளம். ஒன்றிய பாஜக ஆட்சியில் ஒன்றன்பின் ஒன்றாக ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொடக்கத்திலிருந்தே மோடி - அதானி கூட்டு சதி பலமுறை அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

நேற்று செபிக்கு நிகரான அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால், இந்தியாவில் அதிக விலை சூரிய மின் சக்தி உற்பத்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக கௌதம் அதானி மற்றும் ஏழு கூட்டாளிகள் ரூ.2000 கோடி லஞ்சம் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

2020 மட்டும் 2024க்கு இடையில் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.16,000 கோடி வருமானம் ஈட்டக்கூடிய ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்சம் வழங்கினர் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆந்திரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் போடப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மின்சாரத்திற்கான சமீபத்திய ஒப்பந்தங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மோடி - அதானி உறவு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல கேள்விகளை எழுப்பி இருந்தும், எந்த ஒரு தெளிவான பதிலும் கிடையாது. ஆனால் செபி அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் வருமானவரித்துறை இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் நடத்த முன் வரவில்லை. அப்படி சில விசாரணைகள் மேற்கொண்டபோதும் அவை தொடக்க நிலையிலேயே உயர் அதிகாரிகளின் உத்தரவால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

மோடியின் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஊடக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவையை கையகப்படுத்துவதற்கு வசதியாக ஏஜென்சிகள், தவறாக பயன்படுத்தப்பட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குறி வைக்கவும் எதிர்க்கட்சிகளை முடக்கவும் எதிர்க்கட்சி முதலமைச்சர்களை சிறையில் அடைக்கவும் இத்தகைய அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மோடியை பற்றி பேசினால் கூட பா.ஜ.கவினர் கோபப்படுவதில்லை. ஆனால் அதானியைப் பற்றி பேசினால் வழக்கு தொடுக்கிறார்கள். தங்களது ஆட்சியை அதானி கையில் கொடுத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்த ஆட்சியை பாஜக அரசு, அதானி கையில் கொடுத்துள்ளது. அதிகாரமே அவர் கையில்தான் உள்ளது. அதானியின் பசுமை ஆற்றல் வணிகம் முந்தைய ஆட்சி காலத்தில் இருந்தது. தற்போதுள்ள ஆட்சியில் அதுபோன்ற எந்த ஒரு தொடர்பும் கிடையாது.” என்றார்.

Also Read: ”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!