Politics

”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு பதவி ஆசையில் அதிமுகவை சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அழித்துவிட்டார்கள். தான்தான் அதிமுகவின் உன்மையான வாரிசு என கூறி அதிமுகவில் இருந்து அமமுக என்ற புதிய கட்சியை உருவாக்கி தினகரனை கொண்டு தேர்தல்களை சந்தித்தார் சசிகலா.

அதேபோல், ஒற்றை தலைவர் என்ற முழுக்கத்தால் பழனிசாமிக்கும் பன்னீர்செல்வதற்கும் விரிசல் ஏற்பட்டு இவர்களது பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்ற ஒரு கூத்தும் நடந்தது. தற்போது அதிமுகவிலேயே மூன்று அணியாக இருந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டதாக, சசிகலாவையும், தினகரனையும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

நாகையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் களஆய்வு ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓஎஸ்.மணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக ஒப்புக்கொண்டார். சசிகலா, தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் என்றும், அவர்களை சேர்ந்த பல குடுபத்தினர் பெரும் கோடீஸ்வரர்களாகி விட்டதாகவும் அவர் கூறினார். கொள்ளையடித்த ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே - அதிகாரத்திற்கு வர ஆசைப்படலாமா? - என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க ஆட்சியில் பெரும் அளவில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை, அ.தி.மு.க ஆட்சியில் மூத்த அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனே ஒப்புக் கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தூத்துக்குடி, கொடநாடு, கும்பகோணம், கோவை.. அதிமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு பிரச்னையை பட்டியலிட்ட RS பாரதி!