Politics

பா.ஜ.க.வின் ‘புல்டோசர்’ அரசியலை இடித்துத் தள்ளியுள்ளது உச்சநீதிமன்றம் : முரசொலி தாக்கு !

முரசொலி தலையங்கம் (16-11-24)

அநியாயத்தை இடித்த உச்சநீதிமன்றம் !

பா.ஜ.க.வின் ‘புல்டோசர்’ அரசியலை இடித்துத் தள்ளி இருக்கிறது உச்சநீதிமன்றம். உத்தரப்பிரதேச பா.ஜ.க. மாநில அரசின் அக்கிரமத்தை, அநியாயத்தை, கொடூரத்தை இடித்துத் தள்ளிவிடும் தீர்ப்பை வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க அவர்கள் மீது வழக்குகள் போட்டு, அவர்களது வீடுகளை இடிப்பதையே சட்டபூர்வமாகச் செய்து வந்தார் பா.ஜ.க.வின் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத். இதே பாணியை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசமும், குஜராத்தும், அரியானாவும் பின்பற்றியது.

இறைத்தூதர் முகமது நபியை விமர்சித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் பேசினார்கள். இதனைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது. 304 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் வீடுகளை ஆளும் பா.ஜ.க. அரசே இடித்துத் தள்ளியது.

சாரன்பூர் என்ற இடத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. பிரயாக்ராஜ் பகுதியில் நடந்த போராட்டம் தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதிகள் இடிக்கப்பட்டன. இவர்கள் போராட்டம் தொடர்பாக கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகக் கூறி வீட்டை இடித்தார்கள்.

கான்பூர் போராட்டத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜாபர் ஹயத்தின் நெருங்கிய உறவினர் முகமது இஷ்தியாக்கின் ஸ்வரூப் நகர் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் அதற்குக் காரணமானவர்கள் இவர்கள் தான் என்றும் சொல்லி இந்த நான்கு பேரின் வீடுகள் இடிக்கப்பட்டன.

உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ம்ரித்யுஞ்ஜய குமார் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்த நாள் சனிக்கிழமை வரும்’ என எச்சரித்து இருந்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப்பிரதேச அரசு இடித்துத் தள்ளியது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ளது அஃப்ரீன் பாத்திமா வீடு. இவரது தந்தை ஜாவேத் முகமது ‘வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்ற கட்சியின் தலைவர். பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத் மீது அரசு குற்றம்சாட்டியது. முந்தைய நாள் இரவு, அவர்களுக்கு ஒரு தாக்கீது கொடுக்கப்படுகிறது. “நாளை காலையில் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம்” என்று சொல்லி விட்டு, மறுநாள் காலையில் இடித்தார்கள்.

2022 ஏப்ரல் 16 அன்று டெல்லியில் ஜஹாங்கீர் பகுதியில் புல்டோசர் நுழைந்தது. இசுலாமியர்கள் வீடுகளை இடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் களத்தில் இறங்கிப் போராடினார். உச்சநீதிமன்றத்துக்கு பிரச்சினையை எடுத்துச் சென்றார். வழக்கும் தாக்கல் செய்தார். மேலும் பலர் வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள்.

ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்கு இது ஒருவிதமான வழிமுறையாக பா.ஜ.க. மாநில அரசு பின்பற்றி வருகிறது. இதற்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினார்கள். உச்சநீதிமன்றம், தானாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பா.ஜ.க.வின் புல்டோசர் அநீதி நடவடிக்கைகளை இடித்துத் தள்ளும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

“ஒரு வழக்கில் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டையோ அவருக்குச் சொந்தமான கட்டடங்களையோ இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இத்தகைய அளவுக்கு மீறிய அதிகாரங்களுக்கும், தான் தோன்றித்தனமான நடவடிக்கை களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அரசியல் ஆட்சியாளர்களின் இது போன்ற அதீத நடவடிக்கைகளை சட்டத்தின் கரம் கொண்டு கையாள வேண்டும்.” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு (13.11.2024) தீர்ப்பளித்துள்ளது.

“இந்தியா மதச்சார்பற்ற ஒரு நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும், அதை அனைத்துக் குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். “சட்டத்தின் ஆட்சியும் குடிமக்களின் உரிமைகளும் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானவை. அத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. சட்டமீறல்கள் சட்டவிரோதத்தை ஊக்குவிக்கும்.” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

“அரசு அதிகாரிகள் தங்களை நீதிபதிகள் போன்று நினைத்துக் கொண்டு குடிமக்கள் மீது இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

அதிகாரிகளை ஏவியது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அல்லவா? உத்தரப் பிரதேசம், அரியானா, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர்களும், டெல்லி துணை நிலை ஆளுநரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அவர்கள் தலைவணங்கி தங்களது தவறான நடவடிக்கைகளை சமப்படுத்துவார்களா?

Also Read: அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்