Politics

புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை : “பாஜக அமைச்சர்தான் காரணம்...” முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி!

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,

“ஜம்மு, காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என ஒன்றிய அரசு கூறி வருகின்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜம்மு, காஷ்மீருக்க மாநில அந்தஸ்து, 370வது ஷரத்து கொண்டு வரப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். என்.ஆர்.காங்கிரசும் இதை வலியுறுத்தியது. பாஜனதாவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் புதுச்சேரியில் என்.ஆர்காங்கிரஸ் - பாஜக ஆட்சி அமைந்து 3 1/2 ஆண்டாகியும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என பிரதமர் மோடி அரசு பதிலளித்துள்ளது. புதுவை மக்களின் எண்ணங்களை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு புறக்கணிக்கிறது. வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜனதா ஏமாற்றி வருகிறது.

முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம். மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், பிரீபெய்டு திட்டத்தை மாற்றி போஸ்ட்பெய்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மின்துறையை என்ஆர்.காங்கிரஸ், பாஜனதா அரசு சீரழித்து வருகிறது.

முதலமைச்சர் தீபாவளிக்கு முன்பு ரேஷன்கடைகளை திறந்து அரிசி, கோதுமை, பாமாயில், மளிகை பொருட்கள் விநியோகம் செய்வோம் என கூறினார். தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றார். மேட்டுப்பாளையத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆனால் எந்த ரேஷன்கடையும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு வாடகை தரவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. இப்போது அங்கன்வாடிகளை தேடி வருகின்றனர். ரங்கசாமி வாக்குறுதி நிறைவேற்றவில்லை. மக்கள் ரேஷன்கடைகளை தேடி சுற்றி வருகின்றனர். ரூ.1000ம் மதிப்பு பொருட்களை ரூ.500க்கு வழங்குவோம் என ரங்கசாமி கூறினார். அதுவும் தரவில்லை.

புதுச்சேரி மக்களை தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ், பாஜனதா அரசு ஏமாற்றி வருகிறது. சில இடங்களில் வழங்கிய அரிசியும் தரமற்றதாக உள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் கையூட்டு பெறப்பட்டுள்ளது. எம்.எல்ஏ சிவசங்கரனை ரவுடி ராமு மிரட்டியுள்ளார். அவரை காவல்துறை கைது செய்யவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள் ரவுடிகளுக்கு சாதகமாக உள்ளதால் காவல்துறை செயல்பட முடியவில்லை. நான் முதல்வராக இருந்தபோது, 13 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தேன்.

அமைச்சர் நமச்சிவாயம் எங்கள் ஆட்சியில் எதிர்கட்சியில் இருந்ததுபோல பேசுகிறார். பல முக்கிய துறைகளை வகித்து பதவி சுகம் அனுபவித்த நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என கூறுகிறார். அப்போது ஏன் அவர் இதை எதிர்க்கவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே செல்லவில்லை? ஆயுள் தண்டனை கைதி ஒருவரை விடுதலை செய்ய நமச்சிவாயம் என்னிடம் சிபாரிசு கேட்டார். அவரை விடுதலை செய்ய முடியாது என உறுதியாக நான் கூறினேன்.

நமச்சிவாயம் என்னை பற்றியும், ஆட்சியை பற்றியும் விமர்சித்தால், அவர் எந்த ரவுடிக்காக பரிந்துரை செய்தார் என பொதுமக்களிடம் பகிரங்கமாக தெரிவிப்பேன். தனது சொத்தை காப்பாற்ற பாஜனதாவில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும். புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு கெட்டுப்போக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்தான் காரணம். இது புதுச்சேரி மக்களுக்கு தெரியும்." என்றார்.

Also Read: மக்களே உஷார்.. கலெக்டர் போல் செல்போனில் பேசி பண மோசடி செய்ய முயற்சி - சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை!