Politics
வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை எழுப்பி 25 ஆண்டுகள் நிறைவு : கலைஞரின் செயல்களை விவரித்த முரசொலி !
முரசொலி தலையங்கம் (14.10.2024)
கடல் அலை நடுவே தமிழ்மலை
வான்புகழ் வள்ளுவருக்கு குமரிமுனையில் 133 அடிக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. 'திராவிட மாடல்' முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அதற்கு வெள்ளிவிழா எடுக்கிறார். 'கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை' என்று அந்தச் சிலைக்குப் புகழாரம் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். குமரியில் நின்று நிலைத்திருப்பது வெறும் சிலை இல்லை. ஈராயிரம் ஆண்டு தமிழ்ச் சிந்தனையின் வடிவம் அல்லவா இது? உலகில் எந்த மொழிக்கு உண்டு, திருக்குறளைப் போன்ற நூல்? தமிழுக்குத் தான் உண்டு! உலகில் எந்த இனத்துக்கு உண்டு, திருவள்ளுவரைப் போன்ற மனிதர்? தமிழினத்துக்குத் தான் உண்டு! ஈரடியால் உலகை அளந்தார் என்பார்கள்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ஓரடியால், வேதியத்தின் வேரைச் சாய்த்த சம்மட்டி அல்லவா வள்ளுவர். அதனால்தான் அவரையே தமிழினத்தின் அடையாளமாக ஆக்கியது திராவிட இயக்கம். "ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவருக்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக் காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம்.
திருக்குறளின் பேரால் நம் பெருமையை திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காரியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால் திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது" என்று 1948 ஆம் ஆண்டு பேசியவர் தந்தை பெரியார்.
கவியரசு கண்ணதாசன் எழுதி - கலைவாணர் பாடிய பாடல் இன்னும் ---- ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“தீனா... மூனா... கானா... எங்கள்
திருக்குறள் முன்னேற்றக் கழகம்
தீனா ... மூனா.... கானா
அறிவினைப் பெருக்கிடும்
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ
திருக்குறள் தந்தார் பெரியார் –- வள்ளுவப்
பெரியார் - – அந்தப்
பாதையிலே நாடு சென்றிடவே – - வழி
வகுப்பதையும் அதன்படி
தீனா... மூனா...கானா...
நடப்பதும் எங்கள் -–
கறுப்பு சிவப்பு என்ற
பேதத்தை நீக்கும் -– தலை
கனத்தை குறைத்து நல்ல
தன்மையை உண்டாக்கும்..." என்று போகும் அந்தப் பாடல்.
அத்தகைய வள்ளுவப் பெரியாரை வாழ்வியல் வழிகாட்டியாக தமிழ்நாடு நினைக்க சமுதாய சீர்திருத்தக் களத்தில் பணியாற்றியது கழகம். தலைநகரில் கோட்டம் அமைத்த கலைஞர், கடல் நகரில் சிலை அமைத்தார். அந்தச் சிலைக்கும் மாபெரும் வரலாறு இருக்கிறது. 1.1.2000 ஆம் நாளன்று அது திறக்கப்பட்டாலும் அதற்கான அடித்தளத்தை 1975 ஆம் ஆண்டே அமைத்தார் முதலமைச்சர் கலைஞர்.
31.12.1975 அன்று தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முதல் முடிவு எடுக்கப்பட்டது. அப்பணிகளைத் தொடர முடியாத அரசியல் சூழல் ஏற்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு சிற்பக் கல்லூரி முதல்வராக இருந்த கணபதி ஸ்தபதியிடம் இதுபற்றி கட்டளையிட்டார். அவரும் 1.3.1990 அன்று திட்டமதிப்பீட்டைத் தந்தார். 17.3.1990 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது. செம்பால் செய்யலாமா, கல்லால் செய்யலாமா என்ற விவாதம் நடந்தது. 25.6.1997 ஆம் நாள் தான் கல்லால் ஆன சிலை செய்வது என தலைவர் கலைஞர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று சிற்பி கணபதி ஸ்தபதிக்கு முதல்வர் கலைஞர் கட்டளையிட்டார். 19.10.1999 அன்று சிலை அமைப்புப் பணிகள் அனைத்தும் முற்றுப் பெற்றது. 2000 ஆண்டின் முதல்நாளில் சிலை திறக்கப்பட்டது. அய்யன் வள்ளுவனார் சிலையை முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்தார்.
"கண்ணொளி கொண்ட தமிழரெல்லாம் கண்டு களித்த காட்சி! செவிப்பறை சிறிதும் பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி! இதய- முள்ள தமிழனெல்லாம் உணர்ச்சியால் உந்தியெழுந்து குதித்திட்ட காட்சி" என்று இதைப் பற்றி தலைவர் கலைஞர் எழுதி இருக்கிறார்கள். கலைஞருக்கு அப்போது எப்படி இருந்தது? "அந்தச் சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னை அறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல - என்னையே நான் மறந்துவிட்டேன். நாதஸ்வர இசைவாணர்களும், தவில் வித்வான்களும் அவர் தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர், அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம். மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு மெய்மறந்து போயிருந்திருக்கிறேன். சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன்" என்று எழுதி இருக்கிறார் கலைஞர்.
இந்த உணர்ச்சிக்குப் பின்னால் இருப்பது தமிழ் உணர்ச்சி, தமிழன் எழுச்சி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி ஆகும். சிலையை எழுப்பியதன் மூலமாக குறளாய் சமுதாயத்தை உருவாக்க நினைத்தார் கலைஞர். சிலைக்கான வெள்ளிவிழா கொண்டாடுவதன் மூல- மாக குறளாய சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறார் இன்றைய முதல்- மைச்சர். "வள்ளுவம் - என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும். சமுதாயம் - குறள் சமுதாயமாக மலர வேண்டும். வேற்றுமையின் வேர்களைக் கிள்ளியெறிய வள்ளுவ மருந்தே பொது மருந்தாக ஆகுதல் வேண்டும்.* -- என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.
சிந்தனைகள் செயல்வடிவம் பெற உழைப்போம்!
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!