Politics
கோவிட் முறைகேடு புகார்! : பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர பரிந்துரை!
கர்நாடகா மாநிலத்தில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிபிஇ கிட் கொள்முதல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதால், பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பி.ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர, நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, கொரோனா தொற்று பரவல் இருந்தது. தொற்று பரவல் தடுக்க மாநில சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பயன்படுத்த பிபிஇ கிட் பயன்படுத்தப்பட்டது. இந்த பிபிஇ கிட் கொள்முதல் செய்தது உள்பட கோவிட் காலத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிற மருத்துவ செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியாக நாங்கள் (காங்கிரஸ்) இருந்தபோது குற்றம்சாட்டியதுடன், எந்தெந்த வகையில் முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசிடம் அறிக்கை கொடுத்தோம்.
ஆனால், அந்த அறிக்கை மீது பாஜக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவிட் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சி தான் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், கோவிட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தோம். மக்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு கொடுத்ததை தொடர்ந்து, கோவிட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கில் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தோம்.
நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி முதல் கட்டமாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. இதில் கோவிட் காலத்தில் முறைகேடு நடந்துள்ளது உண்மை என்பதை உறுதி செய்திருப்பதுடன் இந்த முறைகேடு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பி.ஸ்ரீராமுலு ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் கொடுத்துள்ள பரிந்துரையை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது கூட்டம் நடத்துவதற்கு முன் சென்னபட்டன உள்ளிட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2வது அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்தபின் 2வது கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கோவிட் முறைகேடு தொடர்பாக நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் கொடுத்துள்ள அறிக்கை செயல்படுத்தும் செயலில், அரசு வேகம் காட்ட முயற்சிக்கவில்லை.
நிதானமாக செயல்படுவோம். சட்டத்திற்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. கோவிட் முறைகேடு நடந்துள்ளது உண்மை. கோவிட் காலத்தில் உள்நாட்டில் பிபிஇ கிட் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியிருந்த நிலையில், அப்போதைய பாஜக அரசு ஹாங்க்காங்கில் இருந்து கொள்முதல் செய்துள்ளதால் ரூ.14 கோடி முறைகேடு நடந்துள்ளது.
கோவிட் முறைகேடு நடவடிக்கையில் மாநில அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. கோவிட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் பணம் திரும்பப் பெறுவது உள்பட பல பரிந்துரைகளை ஆணையம் செய்துள்ளது. எந்தெந்த வகையில் கோவிட் முறைகேடு நடந்துள்ளது, உயிரிழந்த உடல்களை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாதித்தார்கள், மக்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது உள்பட பல விவரங்கள் முதல் கட்டமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் கொடுக்கும் இறுதி அறிக்கையில் இன்னும் பல முறைகேடுகள் தொடர்பான விவரம் இருக்கும் என்று தெரியவருகிறது” என்றார்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!