Politics

வக்ஃப் வாரிய திருத்த மசோதா : RSS அமைப்பிடம் கருத்து கேட்பதாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மீது புகார் !

வக்ஃப் வாரியத்துக்கு எதிரான கருத்துக்களை அதிகரித்து காண்பிக்க தொடர்பு இல்லாத அமைப்புக்களிடம் கருத்து கேட்கப்படுவதாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மீது அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் புகார் அளித்துள்ளது.

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

அதனால்தான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததுபோல், தற்போது வக்ஃபு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். எனினும் இந்தியா கூட்டணி எம்.பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்ஃபு மசோதா தாக்கல் செய்தார்.

ஆனால், பாஜக கூட்டணி கட்சியான நிதிஷ்குமார், சந்திரபாபு ஆகியோர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்புவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதே நேரம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் கூட்டுக்குழுவின் இதர உறுப்பினர்கள் குரலுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என அந்த குழுவில் இடம்பிடித்திருந்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், வக்ஃப் வாரியத்துக்கு எதிரான கருத்துக்களை அதிகரித்து காண்பிக்க இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லாத அமைப்புக்களிடம் கருத்து கேட்கப்படுவதாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மீது அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் புகார் அளித்துள்ளது.

வக்ஃப் வாரியத்துக்கு எந்த தொடர்பும் இல்லாத ஆர்.எஸ்.எஸ் சார்பு குழுக்கள், தொல்லியல் துறையிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்து கேட்பதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது. வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவான கருத்துக்களை அதிகப்படுத்தி காண்பிக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Also Read: இனி திரைப்படங்களில் நடிக்கக் கூடாது : ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை விதித்த மோடி !