Politics
“முதலமைச்சரை புகழ்ந்த 'இந்தியா டுடே': அவர்களுக்கு தெரிவது சில தற்குறிகளுக்குத் தெரியவில்லை - முரசொலி !
முரசொலி தலையங்கம் (07-11-2024)
அதிகார சபையில் அடக்கமான போர் வீரன்
ஆறாவது முறையாக கழகத்தை ஆட்சியில் அமர்த்தி தனது அயராத உழைப்பால் தமிழ்நாட்டை தரம் உயர்த்தி வரும் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவின் மதிப்புமிகு இதழ்களில் ஒன்றான 'இந்தியா டுடே' என்ன சொல்லி அழைத்திருக்கிறது தெரியுமா? “HUMBLE SOLDIER'! “அடக்கமான போர் வீரன்" ! வெறும் போர் வீரன் என்று சொல்லவில்லை, 'அடக்கமான போர் வீரன்' என்று சொல்லி இருக்கிறது 'இந்தியா டுடே'. “நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின். அந்த இயல்பு, அவரது நடவடிக்கையில் தெரியும்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் காமராசர் அரங்கத்தில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டார். அதனைத்தான் 'இந்தியா டுடே' இப்போது சொல்கிறது!
சொல்லுக்குச் சொல் -- கல்லுக்கு கல் நின்று மோதிக் கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவு செய்பவர் அல்ல இன்றைய முதலமைச்சர். அவர் சாதித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் நின்று புறம் சொல்பவர்கள் சொல்லை, அவர் காது கேட்காது. ஏனென்றால் அவரது பயணம் வேகமானது, விவேகமானது, அவருக்கானது அல்ல. நாட்டுக்கானது. மக்களுக்கானது. “நான் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், என் மனச்சாட்சிக்கும் பயப்படுபவன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். அதனால்தான் அவரது போரை யாரைப் பற்றியும் கவலைப்படாமல், அடக்கமாக -- அதேநேரத்தில் அழுத்தமாக நடத்திக் கொண்டி ருக்கிறார். அதனைத் தான் 'அடக்கமான போர் வீரன்' என்று சொல்லி இருக்கிறது 'இந்தியா டுடே'.
அவர் முதலமைச்சராவதற்கு முன்பு வரை, அவர் கழகத் தலைவராக ஆவதற்கு முன்பு வரை, 'இப்படி எல்லாம் சிறப்பாகச் செயல்படுவார்' என்பதை அறியாத கூட்டம் அதிகம் இருந்தது. 'அவர் சிறப்பாகச் செயல்பட்டுவிடக் கூடாது' என்று கருதிய கூட்டம்தான் அது. 'கலைஞருடன் எல்லாம் முடிந்துவிடும்' என்று கருதிய கூட்டம் அது. 'முடித்துவிட வேண்டும்' என்று கங்கணம்கட்டிய கூட்டம் அது. அதுவரை ‘அடக்கமாக' -- இருந்து - தலைவராக ஆனதும் 'போர் வீரனாய்' தோன்றினார் மு.க.ஸ்டாலின். தமிழினத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் இருக்கிறேன் என்று சொன்னார். தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமா சொன்னார்? தனது எல்லைப் பரப்பை இந்தியா முழுமைக்கும் விரித்தார் தலைவர் ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர் வீரனாய் எழுந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்திக் காட்டிய படுதோல்வியை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்த 'இந்தியா' கூட்டணியை உருவாக்கக் காரணமாக அமைந்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தலைவர் கலைஞர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அகில இந்தியத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து நடத்திய புகழஞ்சலிக் கூட்டம் முதல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை எத்தனை கூட்டங்கள்? அகில இந்தியக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களையும் அழைத்து வந்து மேடையிட்டுக் கொடுத்தார். மேடையிட்டு மட்டுமா கொடுத்தார்? அவர்களுக்குள் இருந்த வேற்றுமை வாடையைப் போக்கினார். பா.ஜ.க. நீங்கலான அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“உங்களுக்குள் இருக்கிற அனைத்து வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் மறந்து ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி சாத்தியம்' என்று சொன்னார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை சில மாநில முதலமைச்சர்கள் எடுத்தார்கள். அவர்களும் சென்னை வந்து தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்கள். 'அது வெற்றி பெறாது' என்று முதல் வரியிலேயே நிராகரித்தார். அதனால் தான் முளையிலேயே அந்த முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்படிச் சொன்ன முதலமைச்சர்களும் 'இந்தியா' கூட்டணியில் பின்னர் இடம்பெற்றார்கள். அதனால்தான் 'இந்தியா டுடே' இந்தியா முழுமைக்குமான பட்டியலில் பத்துக்குள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நிறுத்தி இருக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் கொண்ட அந்தப் பட்டியலுக்கு' இந்தியா டுடே' வைத்துள்ள தலைப்பு, 'இந்தியாவின் அதிகார சபை' என்பது ஆகும். வெறும் அதிகார சபை அல்ல! 'இந்தியாவின்’ அதிகார சபை ஆகும். முதல் பத்து பேரில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
•அடக்கமான போர்வீரன்
•தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர்.
•தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது.
•தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியது. •எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட பா.ஜ.க.வுக்குக் கிடைக்காமல் செய்துவிட்டார்.
•தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு எஃகு போல திகழ்கிறார்.
•2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறார்.
•பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். ஆட்சியையும் கட்சியையும் எப்படி வைத்துள்ளார் என்பதையும் சொல்லி, எட்டாவது இடத்தை எப்படி எட்டினார் என்பதையும் இந்த எட்டு வரிகளுக்குள் சொல்லிவிட்டார்கள். இவை அனைத்தும் 'இந்தியா டுடே' வழங்கிய பாராட்டுப் பத்திரங்கள் ஆகும். 'இந்தியா டுடே'வுக்குத் தெரிவது, இங்குள்ள சில தற்குறிகளுக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும், அதை உணரும் திறமில்லை போலும்! இதுகள் உள்ளூரில் உளறிக் கொண்டு கிடக்கட்டும். முதலமைச்சர் 'அடக்கமான' புகழை உலகளவில் பெறட்டும்!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!