Politics

ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு.இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போராட்டத்தை விடாத விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு,கிநோரி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கி கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து, அந்த குழு சார்பில் பல கட்ட ஆலோசனைகள் நடந்துள்ள நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும், டெல்லி சென்று போராட்டத்தை தொடருவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளான நவம்பர் 25ஆம் தேதி முதல் விவசாய சங்க தலைவர் ஜகஜித் சிங் தாலேவால் தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!