Politics
மோடியின் 11 ஆண்டு ஆட்சியிலும் மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல் தொடருகிறது - முரசொலி !
முரசொலி தலையங்கம் (4.11.2024)
இலங்கையிடம் இந்தியாவின் கோரிக்கை!
“மீனவர்களுக்கு எதிராகப் படைபலத்தைத் தவிர்க்க வேண்டும்” –- என இலங்கையிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இனியாவது இலங்கை, இதனைக் கேட்டுச் செயல்பட வேண்டும்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகச் சொல்லி தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களைத் தாக்குவதும், வலைகளை அறுப்பதும், படகுகளை உடைப்பதும் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து நடத்தப்படும் கொடுஞ் செயல்களாக அமைந்துள்ளது. எதைக் கேட்டாலும், ‘எல்லையைத் தாண்டி வந்தார்கள்’ என்று சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
ஒரு வாரத்துக்கு முன்பு கூட 16 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார்கள். 128 மீனவர்கள் இப்போது இலங்கை சிறையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் 199 படகுகள் அந்த நாட்டின் வசம் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 482 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 50 நாளில் மட்டும் 100 பேர் கைதாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதனை ஒன்றிய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இலங்கை கடற்படை அடங்கவில்லை. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னதாக தமிழீழப் போராளிகளுக்கு உதவுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்காக டீசல் கடத்தி வருவதாகச் சொன்னார்கள். அதையே போர் முடிந்த பிறகும் இலங்கை அரசாங்கம் சொல்லி வந்தது. இன்னும் சொன்னால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாக்குதல் அதிகம் ஆனது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்னும் அதிகம் ஆனது.
இலங்கையில் நிலையான அரசுகள் அமைந்திருந்த போதுதான் இவை நடந்தன என்றால், பலவீனமான அரசுகள் ஆட்சியிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டும் நிலையாக நடைபெற்றன. ஆட்சிகள் மாறினாலும், படைகள் ஒன்றுதான் என்பதைப் போல அவை நடந்தன. இரண்டு மிகப்பெரிய வலது சாரி கட்சிகளின் அரசுகள் மாறி மாறி ஆட்சியில் இருந்தன. எந்த ஆட்சி மாற்றம் இலங்கையில் நடைபெற்றாலும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தது. இப்போது இலங்கையில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி, ஆட்சிக்கு வந்துள்ளது. இனியும் இவை தொடரலாமா? இந்திய மீனவர்களைக் காக்கும் கடமை, இலங்கை அரசுக்கும் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் கண்டிக்கும். அந்த அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அந்த மீனவர்கள் விடுதலை ஆனதும் அமைதியாகி விடும். ‘இந்தியாவில் பலவீனமான மன்மோகன்சிங் ஆட்சியில் இருப்பதால்தான் அண்டை நாடுகள் பயப்படவில்லை’ என்று பிரதமர் ஆவதற்கு முன்னால் நரேந்திரமோடி சொன்னார். அவர் ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளிலும் மீனவர்களைத் தாக்கும் கொடூரமான செயல்களை இலங்கை தொடர்ந்து வந்தது. மீனவர்களை அவர்கள் கைது செய்வார்கள். வழக்கம் போல இவர்கள் கடிதம் அனுப்புவார்கள். அவர்கள் விடுதலை செய்வார்கள். அதோடு பிரச்சினை அமுங்கிவிடும். நிரந்தரத் தீர்வை உருவாக்குவதற்கான பேச்சுகளை நடத்தவில்லை பா.ஜ.க. அரசு.
இந்தியா -–- இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட காலம் நீடித்து வரும் பிரச்சினைகளைக் கையாள இருநாட்டு அதிகாரிகள் இடம் பெற்றுள்ள கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்திலான கூட்டுப் பணிக்குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இருநாடுகள் தொடர்புடைய பிரச்சினையாக இருந்தால் இருநாட்டு அதிபர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும். அல்லது இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தால்தான் அது அதிகாரம் பொருந்திய அமைப்பாக இருந்திருக்க முடியும். அதையும் செய்யவில்லை.
இருநாட்டு அதிகாரிகள் கொண்ட கூட்டுப் பணிக்குழுவாவது அடிக்கடி கூடியதா என்றால் இல்லை. அவசர காலத்திலாவது கூடியதா என்றால் அதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 30 ஆம் தேதியன்று கூடியிருக்கிறது. இருநாட்டு மீன்வளத் துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இருநாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
கொழும்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய மீன்வளத் துறை செயலாளர் அபிலக்ஷ லிகி, “மீனவர்களுக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் படைபலத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும், இருதரப்பினரும் ஒத்துழைத்தால் மட்டுமே அமைதியான சூழல் நிலவும் என்றும் இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களைக் கைது செய்வது, கடும் தண்டனை வழங்குவது, அதிகப்படியான அபராதங்களை விதிப்பது ஆகிய அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இருநாட்டு மீனவர் சங்கங்களின் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருநாட்டு மீனவர் சங்கங்களின் கூட்டத்தை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இப்போது தொடங்கிய பேச்சுவார்த்தை இனி தொடர்ந்து நடைபெற வேண்டும். இது அதிகாரிகள் மட்டத்திலானதாக முடிந்துவிடாமல் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பாக மலர வேண்டும். இருநாட்டு பிரதமர்களும் இது குறித்து மட்டும் பேசுவதற்கான சந்திப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது நடந்தால்தான், இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களை மதிப்பதாகக் கருத முடியும். இலங்கை அரசையும் இடதுசாரி அரசாகக் கருத முடியும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!