Politics

தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?

கேரள மாநிலத்தில் காங்கிரஸ், சிபிஐஎம் இரு கட்சிகளுமே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சிகளாக இருந்து வருகின்றன.

பிரதமர் மோடியால் லட்சம் பேரை திரட்டி, பேரணி மேற்கொண்ட போதிலும், பா.ஜ.க.வின் மதவாத அரசியல் கால் பதிக்க இயலாத மாநிலமாக தமிழ்நாட்டை அடுத்து கேரளா இருக்கிறது.

எனினும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், திருச்சூர் தொகுதியை வென்று பா.ஜ.க.விற்கு, கேரளத்தில் ஒரு இடம் கிடைக்க வழிவகுத்தார் நடிகர் சுரேஷ் கோபி.

இந்நிலையில், கேரளத்தின் சிறப்புமிகுந்த விழாவாக இருக்கக்கூடிய திருச்சூர் பூரம் விழாவிற்கு, ஒன்றிய இணை அமைச்சரும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி வருகை தரும் போது, ஆம்புலன்சில் வந்ததாக புகார் எழுந்தது.

இதனை அப்போதைய அளவில், சுரேஷ் கோபி உறுதியாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்திக்கொள்ளுங்கள் என சவால் விட்டார்.

இது குறித்து, திருச்சூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.கே. அனீசு குமார், “திருச்சூர் நகரம் வரை கோபி அவர்கள், தனது சொந்த வாகனத்தில் தான் வந்தார். அதன் பிறகு விழா நடக்கும் இடத்திற்கு தனியார் வாகனம் வர இயலாத போதுதான், ஆம்புலன்சை பயன்படுத்தினார்” என காரணம் தெரிவித்தார்.

இதனையடுத்து, சுரேஷ் கோபியே தற்போது ஆம்புலன்சில் தான் வந்தேன். கால் வலி காரணமாக, கூட்டத்தில் நடக்கமுடியாதது தான், ஆம்புலன்சில் வர காரணம் என்று மழுப்பியுள்ளார்.

சுரேஷ் கோபி தற்போது உண்மையை தெரித்திருக்கிற நிலையில், முன்பு ஏன் அழுத்தம், திருத்தமாக உண்மையை மறுத்தார் என கேள்விகள் எழுந்து வருகின்றன.

Also Read: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?