Politics

புதுச்சேரியில் பாஜக கூட்டணி மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி செய்கிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு !

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் திட்டங்களை முடக்கியுள்ளதை பார்த்து துணைநிலை ஆளுநர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆட்சியாளர்கள் மீது துணைநிலை ஆளுநர் அதிருப்தியில் உள்ளது தெரிகிறது. புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய மின்துறை அமைச்சரிடம், புதுச்சேரியில் மின்துறை தனியார்மயத்தை கைவிட வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தவில்லை.

இதிலிருந்து புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிகிறது. புதுச்சேரியில் மின்கட்டணத்தை உயர்த்தி அரசு மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் தொடர்பாக, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பிக்கு தமிழக சிபி.சி.ஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை செல்வகணபதி தனது எம்.பி மற்றும் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை மேலாண்மை மண்டல திட்ட வரையறை என்ற பெயரில் மீனவ சமுதாய மக்களுக்கு ஆளும் அரசு மிகப்பெரிய துரோகம் செய்கின்றது. மீனவ பகுதிகளை சுற்றுலா என்ற பெயரில் தனியாரிடம் கொடுத்து, மீனவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை அரசு நிறுத்திகொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.எஸ்.எஸ் என்.ஆர்.ஐ இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ இடங்களை பெற்ற விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

Also Read: ”ரஜினிக்கு பதில் பாஜக விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளார்களோ ?...” - சபாநாயகர் அப்பாவு !