Politics

சென்னை மழையின்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கே இருந்தார் ? - அமைச்சர் சேகர் பாபு கேள்வி !

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " வடசென்னை வளர்ச்சி திட்டத்தைமுழு வேகத்தில் முடுக்கிவிட முதல்வர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 2024-25 வடசென்னை வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டத்தில் 140 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பணிகளுக்கு அரசாணை மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல பணிகள் கட்டுமானங்கள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வருகிறது.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் மட்டும் 668 கோடி செலவில் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்கா மேம்பாடு, பேருந்து நிலையம் மேம்பாடு, சந்தை மேம்பாடு, பள்ளி மேம்பாடு, சமூகம் மேம்பாடு உள்ளிட்ட 28 பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறுமழைக்கு சென்னை தத்தளிக்கிறது என்று குற்றம் சொல்பவர் எந்த இடத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த இடத்தில் ஆறுதல் கூறினார் இயக்கத்தின் சார்பில் எந்த இடத்திலாவது நிவாரணம் வழங்கினாரா?

மழைவிட்டவுடன் 5 மணி நேரத்தில் 95 சதவீதம் மழை நீர் வடிந்துவிட்டது, 5 தாழ்வான இடங்களில் தான் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த இடத்தில் 24 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிட்டது. எதிர்க்கட்சி அவர்களின் வசைப்பாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். நாங்கள் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் வருவோம்" என்று கூறினார்.

Also Read: பீகாரில் இருந்து வந்து 'தமிழ் மக்கள் இனவாதிகள்' என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை - முரசொலி காட்டம்!