Politics

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்! : காங்கிரஸ், சிவசேனா (UBT), NCP (சரத்) கட்சிகளுக்கு தலா 85 தொகுதிகள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், சிவசேனா (ஷிண்டே) கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் பதவி வகிக்கின்ற போதும், மக்கள் ஆதரவு இந்தியா கூட்டணி பக்கமே இருக்கிறது என்பது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளே தெளிவுபடுத்தின.

காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர, NDA கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

அதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் 20ஆம் நாள் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒத்திய முடிவுகளாகவே இருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி தலைவர்கள், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளுக்கு தலா 85 தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகளில் சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன” என தெரிவித்தனர்.

தொகுதி பங்கீடு தொடர்பான விரிவான தகவல் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இதனால், பா.ஜ.க உள்ளிட்ட NDA கூட்டணி கட்சிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

அக்டோபர் மாதமே மகாராஷ்டிரா தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில், பா.ஜ.க.வின் வெற்றிப்பாதைக்கு காலக்கெடு கேட்டே, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும், பரவலாக வெளிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: இர்பான் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் : மருத்துவமனைக்கு அபராதம்; 10 நாட்கள் தடை - பின்னணி?