Politics

காவிமயமாகும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள்! : பா.ஜ.க அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வினரின் கொள்கை வண்ணமான காவியை, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் உடையாக அணிவதில் தொடங்கி, அரசு நிகழ்வுகளில் காவி பூசல் என தொடர்ந்து, தற்போது மெட்ரோ, பொது நிறுவனங்களின் சின்னம் என அனைத்தும் காவிமயமாகி வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், முதல்வராக பதவியேற்கும் போது, அவர் மதசார்பின்மையை பின்பற்ற வேண்டும் என்பதும், அனைத்து வகுப்பு மக்களின் வளர்ச்சிக்கும் உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை.

எனினும், பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் காவி உடையணிந்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில், மற்ற சமூகத்தினரை வஞ்சிக்கும் நடவடிக்கைகளே தொடர்ந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, ஒன்றிய அரசின் தொலைக்காட்சியான DD தொலைக்காட்சியின் சின்னத்தை காவி நிறத்தில் மாற்றியது, இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான தொடர்வண்டி துறையின் வந்தே பாரத் வண்டிகளுக்கு காவி வண்ணம், கொல்கத்தா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருக்கிற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு காவி வண்ணம் என தொடங்கி, தற்போது ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL சின்னத்திற்கும் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இதனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு தானா என்ற கேள்வியும், ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கும், பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கட்சி செயல்பாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்வியும் வலுக்கத்தொடங்கியுள்ளது.

இதனிடையே, தமிழர்களின் முற்போக்கு சிந்தனைகளை புண்படுத்தும் நோக்கில், உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசுவதை தொடர்ந்து வருகிறது பா.ஜ.க அரசு. அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துபவராக, ஆளுநர் ஆர்.என்.ரவி விளங்கி வருகிறார்.

Also Read: நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!