Politics

"இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறீர்களா?" - பாஜகவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி !

இந்திய அரசிலமைப்பின் முகப்புரையில் மதசார்பற்ற, சோசியலிஸ்ட் ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதனை நீக்க வேண்டும் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மற்றும் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "சோசலிசம் என்பதன் நோக்கம் அனைவருக்கும் நியமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதாகும். அது சமத்துவத்தின் கருத்து. அதனை மேற்கத்திய கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மதசார்பின்மை என்ற வார்த்தையும் அப்படித்தான். இது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து "இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறீர்களா?" என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர். மேலும் "அரசியல் சாசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் மற்றும் பகுதி 3ன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் சரியாகப் பார்த்தால், மதச்சார்பின்மை அரசியலமைப்பின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது என்பது தெளிவாகிறது" என்று கூறினர்.

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி ஒன்றிய அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி வழக்கை நவம்பர் மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Also Read: பாபர் மசூதி இடிப்பு வழக்கு: "கடவுளை வேண்டினேன், தீர்வு கிடைத்தது" - நீதிபதி சந்திரசூட் கருத்தால் சர்ச்சை!