Politics
ரயில் விபத்துக்கள் நடக்காதவண்ணம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் - கலாநிதி வீராசாமி MP கடிதம் !
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சமீபத்தில் நடைபெற்ற கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இரயில் விபத்துக்கள் இனிமேல் நடக்காதவண்ணம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: நமது நாட்டில் அடிக்கடி இரயில் விபத்துக்கள் நடப்பது குறித்தும், அவற்றை தடுக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் கூறி நான் தங்களுக்கு கடந்த 05.06.2023, 15.06.2023 மற்றும் 18.06.2024 தேதியிட்ட எனது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் சரியான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தற்போது தமிழ்நாட்டில் கவரப்பேட்டை என்ற இடத்தில் மீண்டும் ஒரு இரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இது மிகவும் வருத்தமளிக்கிறது. இனியாவது இரயில்வே பாதுகாப்பில் தனி கவனம் செலுத்திடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். எனது முந்தைய 13.06.2023 கடிதத்தில் பாதைகள் பராமரிப்பில் மிகவும் பெரிய தோய்வு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தேன். இது குறித்து இரயில்வே அதிகாரிகளிடம் பேசியதில், இரயில்வே தவறுகளை பராமரிப்பதற்கு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், இரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முக்கிய காரணங்களாக கூறுகின்றனர். எனவே உடனடியாக பராமரிப்பு செலவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், காலியாக உள்ள தொழிலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அதே கடிதத்தில், அதற்கு முன்பு நடைபெற்ற இரயில் தடம் புரண்ட விபத்துகளில் யாரும் காயமடையவில்லை என்றும் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும்.
இரயில் விபத்துகளில் மக்கள் காயம்பட்ட பிறகு, வீழ்த்திக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுவதை விட இப்போதே இரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். நான் குறிப்பிட்டது போலவே தற்போது நடைபெற்றுள்ள கவரப்பேட்டை இரயில் விபத்தில் பலர் காயமுற்றுள்ள. அவல நிலையை நாம் காண்கிறோம். தற்போது இரயில்வே துறை கட்டுமானங்களை நவீனப்படுத்தி புதிய இரயில் சேவைகளை வழங்கப்பட்டு வருவதை நாம் எல்லோரும் பாராட்டிக் கொண்டுள்ள வேலையில், அடிக்கடி நடக்கும் இரயில் விபத்துக்கள் இரயில்வேதளவாடங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா என்றும் கேள்வி நம் மனதில் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? ஏற்படும் விபத்துகள் இரயில்வே தளவாடங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று தெரியவந்துள்ளது.
கவரப்பேட்டையில் நடைபெற்றுள்ள விபத்து ஒரிசாவின் பலசூர் நகரில் ஏற்பட்டுள்ள விபத்தைப் போன்றே ஏற்பட்டுள்ளது. அதாவது விரைவு பயணிகள் இரயிலுக்கு பச்சை விளக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்டவாளங்களில் செல்லும் இரயில் வண்டி மெயின் லைனில் லூப் லைனுக்குச் சென்றுள்ளதால் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரயில் தண்டவாளங்களில் முறையாக இணைப்பு ஏற்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரயில்வே தண்டவாளங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம், கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்று இரயில்வே துறையில் மூத்த அதிகாரிகள் கருதுகின்றனர்.
இவ்வாறு கம்ப்யூட்டரில் ஏற்படும் குறைபாடு இரயில்வே துறைக்கு உயிரிழப்பையே உண்டாக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். சமீபத்தில் நடந்த கவரப்பேட்டை இரயில் விபத்தின் போது கூட விபத்து காரணம் நாச வேலை என்றும் சிக்னல் கோளாறு என்றும் பல செய்திகள் சொல்லப்பட்டன. இதனால் இரயில்வே தொழிலாளர்களின் மீது ஆதாரமில்லாமல் குற்றங்கள் சொல்வதைத் தடுக்க வேண்டும். முறையாக விசாரணை செய்து விசாரணை அறிக்கை பெறப்படும் வரை இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரயில்வே தொழிலாளர்களின் பெயருக்கு இதனால் இழக்கு ஏற்படுகிறது.
எனவே விபத்துகளை தடுக்க தங்களிடம் நான் கூறிக் கொள்வது யாதெனில் உடனடியாக இரயில்வே தளவாடங்கள் பராமரிப்பு, சிக்னல் போன்ற உபகரணங்கள் சரியான முறையில் பராமரித்து, போதுமான நிதி ஒதுக்குதல், தொழிலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளவற்றை உடனடியாக நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மேலும் இரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அனைவரிடமும் கலந்தாலோசிக்கும் முறையை கையாள்வது நலம் பயக்கும் என கருதுகிறேன். விபத்துகளை குறைக்க, தலைமை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதை விட, அனைவரிடமும் கலந்தாலோசித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அடுத்து, வந்தே பாரத் போன்ற இரயில் திட்டங்கள் இரயில்வே துறைக்கு பெருமை சேர்க்கின்றன என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இரயில்வே துறை இயக்கும் இரயில்களில் வந்தே பாரத் இரயில்கள் 0.5 சதவீத அளவே ஆகும். ஆனால் இரயில்வே துறை நாடு முழுவதும் 13,000 இரயில்களை இயக்குகின்றன. 99. 99 சதவீதம் பயணிகள் வழக்கமாக இரயில்வே துறை இயக்கும் இதர இரயில்களை பயன்படுத்துகின்றனர் என்பதை நினைவில் கொண்டு இந்த இரயில் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இரயில்வே துறை எனது கருத்துக்களை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆணைகளை வழங்கிட வேண்டுகிறேன்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!