Politics

தமிழ்நாட்டு மக்களின் வெற்றி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் ? - RN ரவிக்கு கேரளா காங்கிரஸ் பதிலடி !

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ரவியும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் மக்கள் மொழிவாரியாக மக்கள் தனிமைப்பட்டுளார்கள். தமிழ்நாட்டில் தான் மட்டும்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்தவொரு பிற இந்திய மொழியையும் அனுமதிப்பதில்லை" கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரளா காங்கிரசின் சமூகவலைத்தள பக்கத்தில். "அன்புள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் மூன்று மொழிகள் என்ன ? பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கிறார்களா?

தமிழக மக்கள் கேரளாவுக்கு வந்து தொடர்புகொள்வதில் எந்த சிரமமும் இல்லை. நாங்களும் தமிழ்நாட்டுக்கு சென்று தொடர்பு கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழக மக்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு காலம் தென்னிந்தியாவில் வேலை பார்த்தும் எத்தனை தென்னிந்திய மொழிகள் படிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டீர்கள்? "என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: ”விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால்” : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!