Politics

தொடரும் விமான கோளாறுகள்: AIR INDIA-வை இந்திய அரசு திருப்பப்பெற்று நடத்த வேண்டும் - தயாநிதிமாறன் கோரிக்கை!

திருச்சி மற்றும் புதுடெல்லி விமானத்தில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமான டாடா குழுமத்தால் ஏர் இந்தியாவை முறையாக பராமரிக்க முடியாவிட்டால், ஒன்றிய அரசே ஏர் இந்தியாவை திரும்பப் பெற்று நடத்தவேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்துப் அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஒன்றிய அரசு, பொதுப் பணித்துறையாக இருந்த ஏர் இந்தியாவின் கடனில் ரூபாய் 61,000 கோடியை அடைத்து, பின் ‘டாடா’ குழுமத்திற்கு வெறும் ரூபாய் 18,000 கோடிக்கு விற்றது. இந்தப் பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும்போது, அதன் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை மேம்படுத்தப்படும் என பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாக உள்ளது. ஊடக, செய்தி மற்றும் துறை சார்ந்த அறிக்கையின் அடிப்படையில், நிறைய பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவிவரும் சூழலில், ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிகிறது.

சமீபத்தில், திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட IX 613 என்கிற ஏர் இந்தியா விமானம், அதில் பயணித்த பயணிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறு காரணமாக விமானம் சார்ஜாவுக்கு பயணிக்க முடியாமல் 2 மணி நேரத்திற்கு, மேலாக 141 பயணிகளுடன் வானிலேயே வட்டமிட்டது. இதனால் தரையிலிருந்த அவரது உறவினர்களும், நண்பர்களும் என்ன நடக்கப் போகிறது என்றும், செய்வதறியாதும், மேலும் அவர்களது நிலை குறித்தும் மிகுந்த கவலை அடைந்தனர். வானில் ஏற்பட்ட இந்த அவசர நிலையால், ஒட்டு மொத்த மாநிலமுமே பயத்தில் உறைந்தது. நல்லவேளை, விமானி அந்த விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்கினார். இந்த சம்பவத்தின் மூலம், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பராமரிப்புத் தரநிலைக் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

டாடா குழுமத்தின்கீழ் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனம் தொடந்து அலட்சியப் போக்கைக் கையாண்டு தவறுகள் செய்து வருகிறது என பல ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுபோன்ற அவர்களின் தொடர் அலட்சியங்களைப் பார்த்தால் பெயரளவிலான அபராதத்தை மட்டுமே செலுத்திவிட்டு தொடர்ந்து மெத்தனப்போக்கையே கையாள்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறதே தவிர அந்தத் தவறுகளை அந்நிறுவனம் சரிசெய்வதே இல்லை என்பதை ஒரு ஊடக அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தையும் ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தையும் மதிக்காததையே உணர்த்துகிறது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு :

ஆகஸ்ட் 2024இல், பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), தகுதியற்ற விமானிகளுடன் விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா மற்றும் அதன் இரண்டு மூத்த நிர்வாகிகளுக்கு ரூ.99 லட்சம் அபராதம் விதித்தது. இந்த சம்பவம் "மிகவும் ஆபத்தானது" என இயக்குநரகம் கூறியது. இந்த சம்பவம் ஜூலை 10 ஆம் தேதி அன்று, பயிற்சி பெறுகின்ற விமானி மற்றும் பயிற்சி அல்லாத விமானி இருவரும், விமான நிறுவனத்தின் வணிக விமானத்தை இயக்கியதாக DGCA தெரிவித்துள்ளது. இதுவும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயல்.

மே 2024இல், டாடா குழுமம் நடத்தும் ஏர் இந்தியா, தனது இரண்டு விமானங்களில் போதுமான அளவு குளிரூட்டல் வசதி ஏற்படுத்தாமல், நீண்ட நேரம் பயணிகளை அவதிக்குள்ளாக்கியது. மேலும், இதுபோல் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக பயணிகளை சரியாக கவனித்துக்கொள்ளாமல் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது என DGCA தெரிவித்தது.

விமானிகள் போதுமான அளவு ஒய்வு எடுப்பதை உறுதி செய்யும் DGCAவின் விமானக் கடமை நேர வரம்பு (FDTL) விதிமுறைகளை மீறியதாக கடந்த மார்ச் 2024 இல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு DGCA ரூ.80 லட்சம் அபராதம் விதித்தது.

CAT-III கருவி மூலம் தரையிறங்கும் முறையைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெற்ற போதிய விமானிகளை நியமிக்காததற்காக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 30 லட்சம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த CAT-III விமானம் தரையிறங்கும் முறையானது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 50 மீட்டருக்கும் குறைவான பார்வையில்கூட விமானத்தை தரையிறக்க விமானிகளை அனுமதிக்கும். ஜூன் 2023ஆம் ஆண்டு, ஏர் இந்தியா விமானத்தின் விமானி இருக்கைகளில் அங்கீகரிக்கப்படாத நபர்களை அனுமதித்தற்காக, 2 விமானிகள் மற்றும் கேப்டன் ஒருவரை ஒரு ஆண்டிற்கும், துணை விமானி ஒருவரை ஒரு மாத காலத்திற்கும் பணியிடை நீக்கம் செய்தது DGCA.

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டும், இதேபோன்ற சம்பவம் ஏர் இந்தியாவின் டெல்லி - துபாய் விமானத்திலும் நடைபெற்றது. அப்போது, விமானத்தின் கேப்டன் தனது பெண் தோழியை விமானி அறைக்குள் அனுமதித்ததற்காக ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அந்த கேப்டனை மூன்று மாதங்கள் DGCA பணியிடை நீக்கம் செய்தது. மேலும் அதற்கு துணைபோன துணை விமானியையும் கடுமையாக எச்சரித்தது.

ஜூன் 2022 இல், பயணச்சீட்டுடன் இருந்த பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுத்த காரணத்திற்காகவும், அதற்காக அந்தப் பயணிகளுக்கு இழப்பீடு வழங்காத காரணத்திற்காகவும் ரூ.10 லட்சம் ஏர் இந்தியாவிற்கு அபராதம் விதித்தது DGCA.

டாடா நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாக கருதவில்லை என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே ஆதாரமாக விளங்குகின்றன.

மேலும் சமீபத்தில், விமானி ஒருவர் தரையில் இருந்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைக்கு உடனடியாக பதிலளிக்காததால், துணை விமானி பதிலளித்து ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டது என மற்றொரு ஊடக செய்தித் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் அந்த விமான நிறுவனத்தில் உள்ள அதீத பாதுகாப்பு சிக்கல்களின் அறிகுறியாகும். மேலும் போதிய பயிற்சி பெறாத விமானிகளால் பாதுகாப்பு மீறல்கள் அடிக்கடி நடப்பதாகக் துறைச் சார்ந்த வல்லுநர்கள் ஊடக அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இச்செய்தியை மூடி மறைக்க முயல்கின்றனர் என்றும் அச்சம் கொள்கின்றனர்.

ஏர் இந்தியாவின் பழமையான விமானங்களால், அதன் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் கைமாறுவதற்கு முன்பு பல்வேறு புதிய விமானங்களில் இருந்து உதிரிபாகங்களை பழைய விமானங்களுக்கு பொருத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 40 கோடி டாலர் மதிப்பீட்டில், மறுசீரமைப்பை அறிவித்திருந்தாலும், மறுசீரமைப்புப் பணிகள் மெத்தனமாகவே நடைபெறுகிறது என பல ஊடகங்களில் செய்தி வருகின்றன. இதுபோன்ற பழமையான விமானங்களால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நெடுந்தூர பயணத்தில் தொடர் காலதாமதங்கள் ஏற்படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்திலுள்ள பயற்சியாளர்கள், பயிற்சி பெறுபவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் பயிற்சியையும் வழங்காமலே, பயற்சி நேரத்தை கணக்குக் காட்டுகிறார்கள் என்று DGCA தனது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. பயிற்சி மற்றும் பராமரிப்பு ஆகிய இரண்டிலுமே ஏற்படுகின்ற தோல்வியினால், தனியார்மையமாக்கலில் நம்பிக்கை இழப்பதோடு மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தை நம்பி பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்புக் குறித்தும் அச்சம் ஏற்படுகிறது.

இதுபோன்ற கவலையளிக்கும் அறிக்கைகளினால், பொது விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் பின்வரும் விஷயங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

1. பாதுகாப்பு குறித்து DGCAவின் விரிவான ஆய்வறிக்கை:

பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவின் பாதுகாப்பு நெறிமுறைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் பற்றிய முழுமையான மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். விமான நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்கிறதா என்பதை இந்த ஆய்வுகள் மதிப்பிட வேண்டும் மற்றும் அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்த ஆய்வில், இந்த நிறுவனத்தின் கடந்தகால குற்றங்கள், அதற்காக விதிக்கப்பட்ட அபராதங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்தும் கவனிக்க வேண்டும்.

2. விமானி பயிற்சி விதிமுறைகளை மீண்டும் கடுமையாக நிலைநிறுத்துதல்:

இணை விமானிகள் கேப்டனாக பதவி உயர்வு பெறுவதற்கான கால அளவு சமீபத்தில் குறைக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பயிற்சி பெறுபவர்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென்றே தனி பயிற்றுநர்களை நியமிப்பதன்மூலம் பயிற்சி முறைகள் வலுப்பெறுவதோடு, பொறுப்புணர்வும் அதிகரிக்கும்.

3. விமானங்களின் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு குறித்து ஆய்வு :

ஏர் இந்தியா தனது விமானங்களை புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது பழைய விமானங்களை நவீனப்படுத்தி, பாதுகாப்புத் தரத்தை உயர்த்தும்வரை அந்த விமானங்கள் பயணிக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வசதிகளை ஏர் இந்தியா நிறுவனம் தனது சொந்த முயற்சிகளிலேயே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அரசுக்குச் சொந்தமான சேவைகளைச் சார்ந்திருக்கும்போது அத்தியாவசிய பழுதுபார்ப்புக்குக் கூட தாமதமாகிறது.

4. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) தொடர் கண்காணிப்பு :

ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மிகவும் முனைப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை விமான நிறுவனம் முழுமையாகக் கடைபிடிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, தொடர்ச்சியான மற்றும் முன் அறிவிப்பில்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கினால், ஒன்றிய அரசின்கீழ் செயல்படும்போது அந்நிறுவனம் சந்தித்த பல்வேறு சிக்கல்களை நிவர்த்தி செய்யலாம் என்றும், அதிலும் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் உள்ள முக்கியமான சிக்கல்களை தீர்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்தப் பிரச்னைகள் தீர்ந்தப் பாடில்லை.

தொடர்ந்து இதேபோல் இப்பிரச்னைகள் நீடிக்குமானால் நாட்டின் நலன் கருதி ஏர் இந்தியாவின் தனியார்மையமாக்கல் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இதேபோல் பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து சமரசம் செய்யப்படுமானால், தேவையான அளவு பாதுகாப்பு மற்றும் செயல்திறனோடு விமானம் செயல்படுவதை உறுதி செய்வதற்காக விமானத்தின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் விரைவில் தலையிட்டு மேற்குறிப்பிட்டுள்ள கவலைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏர் இந்தியா நாட்டின் பெருமையின் சின்னமாக உள்ளது. எனவே அதன் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் மிக உயர்ந்த தரத்தில் அமைவது மிக முக்கியமானது. இதுபோன்ற பாதுகாப்பு பிரச்னைகள் தீவிரமடைவதற்குமுன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பிரச்னைகள் தொடராத வண்ணம், விமானங்களை ஆய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ஆளுநர் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : "ஆளுநரா? ஆரியநரா?" - முதலமைச்சர் கண்டனம் !