Politics
குடியுரிமை சட்டப் பிரிவு 6A செல்லும்! : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6A-ஐ நீக்கி, கூடுதலான மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கிற்கு, முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கின்ற மக்கள் தொகையை குறைப்பதற்கான நடவடிக்கை, ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க ஆட்சியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) முறையை அமல்படுத்துகிறோம் என்று, அசாம் மாநிலத்தை வாழ்விடமாக கொண்ட சுமார் 19 லட்சம் பேருக்கு இருந்த குடியுரிமையை பறித்துள்ளது அசாம் மாநில அரசு. அதில் 7 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சுமார் 27 லட்சம் பேர், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் பரிசீலனையில் உள்ளனர் என்பதற்காக, அவர்களுக்கு ஆதார் இணைப்பு வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு, 27 லட்சம் பேரில், 9 லட்சம் பேருக்கு ஆதார் வழங்கவுள்ளதாக அசாம் முதல்வர் இமாந்த சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து, ஆதார் மறுக்கப்பட்ட மக்கள், “தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் பரிசீலனை செய்யப்படுகிறது என்று, ஆதார் இணைப்பு மறுக்கப்படுவதால், அரசு உதவிகள் பெற இயலாது அவதிபட்டு வருகிறோம்” என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இதுவரை வஞ்சித்த 50 லட்சம் மக்களையும் கடந்து, மேலும் பலரை குடியுரிமையற்றவர்களாக மாற்ற திட்டமிட்டு வருகிறது அசாம் அரசு.
அவ்வகையில், சனவரி 1, 1966ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியா வந்தடைந்தவர்களுக்கும், சனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரையிலான காலத்திற்குள் இந்தியா வந்து வாழ்வியலை மேற்கொண்டவர்களுக்கும் குடியுரிமை வழங்கும், சிறப்பு சட்டப்பிரிவு 6A-ஐ நீக்க பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டப்பிரிவு 6A நீக்கம் குறித்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்” என்றும், “1985 ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தம் அதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 6A சட்ட பிரிவு ஒரு அரசியல் தீர்வு” என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், “சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு, மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்கள் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள். அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்” என உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !