Politics

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த வழக்கு விரைவில் விசாரணை - உச்சநீதிமன்றம் உறுதி !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.

அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.

எனினும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாத நிலையில், அது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த மனுக்கள் விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்தார். இதனால் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read: புதிய தணிக்கை - வெளிநாட்டில் வெளியிடப்படும் புத்தகங்கள் இந்தியாவில் தடை : எழுத்தாளர்கள் குற்றச்சாட்டு!