Politics

"2015 பெரு வெள்ளத்தில் 289 பேர் பலியாக காரணமானவர்கள் நீங்கள்" - பழனிசாமிக்கு அமைச்சர் KN நேரு பதிலடி !

பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு :

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர்’ என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என உளறி அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி பத்திரிகைகளையும் படிப்பதில்லை; தொலைக்காட்சிகளையும் பார்ப்பதில்லை என்பது அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்ததே…. அதுபற்றி பழனிசாமி அவர்களுக்குத் தெரியுமா?

அன்றைக்கு நடந்தது தமிழ்நாடு முழுமைக்கான ஆலோசனைக் கூட்டம். அதில்தான் ’’பருவ மழையை எதிர் கொள்ள முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும். உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்’’ என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் செய்தி ஊடகங்களில் வெளியானது. அதனை எல்லாம் படிக்காமல் இப்போது தூங்கி எழுந்து அறிக்கை விட்டிருக்கிறார். அன்றைக்கு முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார்.

அதே போன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போது சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிகை விடப்பட்டிருக்கும் நிலையில் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தாமல் போயிருந்தால் ’ஆலோசனைக் கூட்டத்தைக்கூட ஏன் நடத்தவில்லை?’ என பிறகு பழனிசாமி பொங்கியிருப்பார். அதிமுக ஆட்சியில் இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆலோசனைக் கூட்டம் போட்ட வரலாறு இருக்கிறதா? வரலாறு இல்லாதவரின் வயிற்றெரிச்சல்தான் இந்த அறிக்கை!

2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து அதனை மொத்தமாகத் திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்து 289 பேர் பலியாக காரணமானவர்கள் எல்லாம் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போலப் பேசுகிறார்கள். '2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு மனித தவறே காரணம். தனியார் நிலத்தை பாதுகாக்கவே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது’ என சி.ஏ.ஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டார்கள். அப்படியான எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் போட்டால், ’எதற்காக ஆலோசனைக் கூட்டம்’ எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவரை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்!

6 நாட்களுக்கு முன்பு கூட மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின நியமித்தாரே… அதுகூட பழனிசாமிக்கு தெரியாது? மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்கள்.

2015 chennai Flood

பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி. பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களிடம் விளம்பர மோகம்தானே இருக்கும்! ’துணை முதல்வர்’ பதவியை இன்றைக்குப் பரிகாசம் செய்யும் பழனிசாமிக்கு, தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவியை கொடுத்தது ஏன்? தன்னை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி மிரட்டிய போது அவருக்குத் தராமல், தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளப் பன்னீர்செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்தது எதற்காக? தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளத் துணை முதல்வர் பதவியையே கேடயமாகப் பயன்படுத்திய பழனிசாமி எல்லாம் ’விளம்பரம்’ பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பட்ஜெட்டிலும் மானிய கோரிக்கை விவாதங்களிலும் அமைச்சர்கள் அளிக்க வேண்டிய அறிவிப்புகளை எல்லாம் பறித்து சட்டமன்ற விதி 110-ன் கீழ் தானே அறிவித்து விளம்பரம் தேடியவர்தானே பழனிசாமி. தான் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற மாயையை அன்றைக்கு உருவாக்கிய உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை’ என கேட்டிருக்கிறார் பழனிசாமி அவர்கள். கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த தமிழ்நாடு முழுமைக்கான மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நான் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டோம். தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை யாரோ எழுப்பி தேர்தல் வரப்போகிறது தினசரி அறிக்கை விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் இப்படி அற்பமான காரணங்களைச் சொல்லி அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பரிதாபமான பழனிசாமி!

Also Read: Red Alert... அடுத்தடுத்த நாட்களில் தொடர் கனமழை... வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுவது என்ன?