Politics

”ராகுல் காந்தியால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது”- செல்வப்பெருந்தகை !

எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி அவர்கள் மக்களவையில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மூலம், இந்தியா கூட்டணி சார்பாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்களை மிகச் சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார் தலைவர் ராகுல்காந்தி. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதில் ஏதாவது ஒருபக்கம் பழுது ஏற்பட்டாலும் அந்த நாணயம் செல்லாததாகிவிடும். ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்துவது தான் ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற ஜனநாயகம் செழுத்தோங்கியிருந்தது. ஆனால், கடந்த கால மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு வந்தது. சென்ற மக்களவை தேர்தல் தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்;மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி அவர்கள் மக்களவையில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த ஜூலை மாதத்தில் நீட் - யூஜி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், நுழைவு தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசின் பொறுப்பற்ற செயலையும் கடுமையாக கண்டித்தார். இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுவதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தினார். அக்னிவீர் திட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு வழங்காதது குறித்து ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு வழங்குவதன் மூலமே அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூக நீதியை பெற முடியும் என்பதை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதோடு, அதுகுறித்து தீவிரமான பரப்புரையை மேற்கொண்டவர் தலைவர் ராகுல்காந்தி. இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைக் குரலாக அவர் ஒலித்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெறுப்பு அரசியலின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்டு வன்முறை பூமியாக மாற்றப்பட்ட மணிப்பூருக்கு கடந்த ஜூலை மாதம் மூன்றாவது முறையாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைத்து, நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களோடு கலந்துரையாடினார். அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் மக்களவையில் குரல் கொடுத்து நாட்டின் கவனத்தை ஈர்த்தார்.

ஒன்றிய அரசுத்துறைகளில் உயர் பதவிகளில் 45 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் முறையில் தேர்வு செய்ய ஒன்றிய அரசின் அமைப்பான மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்புக்கும், நியமனத்திற்கும் எதிராக கண்டனக் குரல் எழுப்பி, அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் தடுத்தார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறாமல் தடுத்து நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதற்கு பெரும் துணையாக இருந்தார். அந்த மசோதா நிறைவேறியிருந்தால் சிறுபான்மையின மக்களின் சொத்துகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதை தடுத்து நிறுத்தி, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தார்.

இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களது பிரச்சினைகளை அறிந்து அவர்களது குரலாக மக்களவையில் ஒலித்தவர் ராகுல்காந்தி. கடந்த காலங்களில், மக்களவையில் பல ஜாம்பவான்கள் எதிர்கட்சித் தலைவர்களாக செயல்பட்டதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு ஈடு இணையாக இன்றைக்கு இந்திய அரசியலில் நிலவுகிற அசாதாரண சூழலில் பா.ஜ.க.வின் அடக்குமுறையை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், எதற்கும் அஞ்சாமல் அரசியல் பேராண்மையோடு பா.ஜ.க. அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்றவற்றின் மூலம் ஏவிவிடப்படுகிற தாக்குதல்களை எதிர்கொள்கிற துணிச்சல் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இருப்பதை நாடே பார்த்து வியந்து பாராட்டுகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்ப வசதி இருக்கிற காலத்தில் மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடத்துகிற விவாதங்கள் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளிவருவதை நாட்டு மக்கள் பார்க்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற காவலனாக எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் தலைவர் ராகுல்காந்தி செயல்படுகிறார் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி 100 நாட்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென தலைவர் ராகுல்காந்தி அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 100-வது நாளில் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: இணையதள சர்வர் கோளாறு : இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடும் பாதிப்பு... முழு விவரம் என்ன?