Politics

பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் - உறுதி செய்த உச்சநீதிமன்றம் !

தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது, பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதனிடையே, அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட சி.பி.ஐ.எம் சார்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை பின்பற்றி பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆனால் இந்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியது . எனவே, அதற்கு சரியான தீர்வுக்காண, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்த உள் ஒதுக்கீட்டு தீர்ப்புக்கு எதிரான சீர் ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்பதை எதிர்த்து தொடர்ந்த சீர் ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இஸ்லாமியர் கட்டுமானங்களை இடிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !