Politics

கிரீம் பன் விவகாரம் : "GST திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளில் இது ஒரு சின்ன உதாரணம்தான்" - அமைச்சர் PTR !

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கோவையில் அமைக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கோவையில் இருக்கும் மிகப்பெரிய துறைகளில் இதுவும் ஒன்று.

பல காரணங்களால் இங்கு கட்டடம் தாமதம் ஆகிறது. ஆனாலும் உரிய விதிமுறைகளை பின்பற்றி சான்றிதழ் பெற்று திறக்க இருக்கின்றோம். இந்த பூங்காவின் மூலம் சாதாரணமாக 3250 பேருக்கு அதிகமாக வேலை கிடைக்கும்.

ஒரு சில நிறுவனங்கள் இந்த இடத்தை முழுமையாக இடத்தை கேட்கின்றனர். ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்காக விதிமுறைகளை உருவாக்க கோரி இருக்கிறேன். 15 ஆயிரம் சதுர அடியாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்

இங்கு ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணியும் நடந்து கொண்டு இருக்கின்றது. பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கில் நிதி துறையில் சீர்திருத்தம் செய்தது போல, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சீர் திருத்தம் செய்யவே என்னை அனுப்பி இருப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்

தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில் திருத்தம் தேவைபடுகின்றது. அரசில் உள்ள துறைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்காமல் சில மாற்றங்கள் செய்யபட வேண்டும். வட சென்னை, ஓசூர் கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகின்றதுஇரு ஆண்டுகளுக்கு முன்பே நிதி நிலை அறிக்கையில் இதை கூறி இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஜி.எஸ்.டி மற்றும் கிரீம் பன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ வேறுதுறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி பற்றி பேச விரும்ப வில்லை. ஜி.எஸ்.டி குறித்த திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளில் இது ஒரு சின்ன உதாரணம்தான். திட்டமிடுதலில் பல குளறுபட்டிகள் இருக்கின்றன. ஒன்றிய அரசின் மனம்பான்மை சரியாக இருக்க வேண்டும்.மிகவும் வேகமாக இதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Also Read: “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” - செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு முதலமைச்சர் வரவேற்பு !