Politics
சர்ச்சை கருத்து... பின் வாங்கிய பாஜக... பகிரங்க மன்னிப்புக் கேட்ட பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலருக்கும் கேடு விளைவிக்கும் பல்வேறு சட்டங்களையும் இயற்றி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரை வைத்து போராட்டத்தை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டங்களை திரும்பப்பெற்றது பாஜக அரசு. இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் உயிரிழந்து, காயமடைந்து, பட்டினியிருந்து பல துன்பங்களை கடந்தனர்.
தங்கள் உரிமைக்காக போராடிய விவசாயிகளை பாஜகவினர் கொச்சைப்படுத்தி பேசினர். அதில் குறிப்பாக அப்போதைய பாஜக ஆதரவாளராக இருந்த நடிகை கங்கனா, விவசாயிகளை தீவிரவாதிகள் என்றார். இதற்கு நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. எனினும் இந்த போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் தனது வாயை கட்டுப்படுத்தாத கங்கனா, விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். அதிலும் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கங்கனா கடுமையாக பேசியிருந்தார். மேலும் விவசாயிகள் ரூ.100, ரூ.200 என்று பணம் வாங்கிக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தார்.
கங்கனாவின் கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், ஒன்றிய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் கங்கனாவை விமான நிலையத்தில் சட்டென்று கன்னத்தில் அறைந்துள்ளார். இருப்பினும் விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக பேசி வருகிறார். அண்மையில் கூட “ஒன்றிய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்கதேசத்தில் இப்போது நடக்கும் சூழலை போராட்டம் நடத்திய விவசாயிகள் உருவாக்கியிருப்பார்கள்.
வேளாண் சட்டங்கள் போராட்டத்தின்போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு சதிகள்தான் காரணம். இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்.” என்றார்.
இந்த பேச்சுக்கு மேலும் வலுவான கண்டனங்கள் எழுந்த நிலையில், பாஜக தலைமை, “மாண்டி எம்.பி கங்கனா ரனாவத், எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல. கங்கனாவின் அறிக்கை அவரின் தனிப்பட்ட கருத்து." எனக் கூறி ஒதுங்கியது.
இந்த சூழலில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு கங்கனா ரனாவத் பேட்டியளித்தபோது, “ஒரு சில மாநிலங்கள் மட்டுமே எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மீண்டும் இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.
கங்கனாவின் இந்த பேச்சுக் குறித்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “விவசாயச் சட்டங்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற எம்.பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய அறிக்கையிலிருந்து பாஜக விலகிக்கொள்கிறது. விவசாய மசோதாக்கள் மீதான பா.ஜ.க-வின் பார்வையை அது சித்தரிக்கவில்லை. இது அவரது தனிப்பட்ட கருத்து. பா.ஜ.க சார்பில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட அவருக்கு அதிகாரம் இல்லை. இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று பாஜக பின்வாங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டு பாஜக எம்.பி., கங்கனா மன்னிப்பு கேட்டுள்ளார். தனது கட்சியின் கண்டிப்பை அடுத்து தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் கங்கனா ரனாவத். வேளாண் சட்டங்கள் குறித்த தனது பேச்சை திரும்ப பெறுவதாகவும், பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாவும் கங்கனா அறிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!