Politics
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!: ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்வியில் மொழித் திணிப்பு, அரசு அலுவல்களில் மொழித் திணிப்பு, ஒன்றிய திட்டங்களில் மொழித் திணிப்பு, போட்டித் தேர்வுகளில் மொழித் திணிப்பு ஆகிய திணிப்புகளைத் தொடர்ந்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற குற்றவியல் சட்டங்களில் மொழித் திணிப்பு செய்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்திய அளவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் இருந்தாலும், அதில் தமிழ் என்கிற உலக சிறப்புமிக்க, தொன்மை மிக்க மொழி இடம்பெற்றிருந்தாலும், ஆரிய கண்ணோட்டம் மிக்க சமஸ்கிருதத்தையும், ஆரிய கருத்தியலுக்கு ஒத்துப்போகிற இந்தி மொழியையுமே திணிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு.
அதற்கு, UPSC போட்டித் தேர்வினை தமிழிலும் எழுதலாம் என்ற அமைப்புமுறை நீக்கப்பட்டது, அமைச்சகங்களின் பெயர்கள் ஜல் சக்தி, பஞ்சாயத்தி ராஜ் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்தது, தேசிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதத்தை 6 - 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாய மொழிப்பாடமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் உதாரணங்களாய் அமைந்துள்ளன.
மேலும், மூன்று குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சி சட்டம் (IEA) ஆகியவற்றின் வரையறைகளில் மாற்றத்தை உண்டாக்கி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினயம் என இந்தி மொழி அறியாதவற்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் பெயர் மாற்றம் செய்து, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல், அதனை நிறைவேற்றியும் உள்ளது ஒன்றிய பா.ஜ.க.
இந்நடவடிக்கையை எதிர்த்து, இந்திய அளவில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சட்ட வல்லுநர்களே, மூன்று குற்றவியல் சட்டங்களில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டித்து வருகின்றனர்.
அதன்படி, அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், இந்த சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்த ஒரு விவாதமும், கலந்தாலோசனையும் இல்லாமல் தன்னிச்சையாக இந்த சட்டங்களை அமல்படுத்தியுள்ளதாகவும், அரசியலமைப்பு நடைமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், அமல்படுத்தப்பட்ட அதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய பா.ஜ.க அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!