Politics

மீண்டும் உரிமையாளர்களின் பெயர் அச்சிட்ட பலகைகள்? : யோகி ஆதித்யநாத்தின் மற்றொரு சர்ச்சை நடவடிக்கை!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கருத்தியலை பின்பற்றி நடத்தப்படும் ஆட்சிகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் நடக்கிற ஆட்சி தான், பிரிவினைவாதத்தை முற்றிலும் போற்றும் ஆட்சியாக அமைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நல்லவர்களாக பிரதிபலிக்கும் பொருட்டு, மற்ற மதத்தினரை இழிவுபடுத்தும் நிகழ்வுகள், உத்தரப் பிரதேசத்தில் பஞ்சமில்லாமல் நடந்து வருகின்றன.

அதற்கு முதல் மற்றும் முதன்மை காரணமாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் காவியே, பச்சை நிறத்தையும், வெள்ளை நிறத்தையும் விழுங்கும் நோக்கில் செயல்படுவதாய் அமைந்துள்ளது.

அதற்கு சான்றுகளாக, சிறுபான்மையினர்களின் மத ஆலயங்கள் இடிப்புகளும், சிறுபான்மையின உரிமை பறிப்புகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இருக்கின்றன.

இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், கன்வர் யாத்திரை நடைபெறும் இடங்களில் அமைந்துள்ள கடைகளின் பெயர் பலகைகளில், அக்கடைகளின் உரிமையாளர்களின் பெயர்களும் இடம்பெறவேண்டும் என உத்தரவிட்டு, சர்ச்சையை உருவாக்கிய யோகி ஆதித்யநாத் தற்போது, அது தொடர்பான மற்றொரு சர்ச்சை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

கடந்த முறை, ஒரு சாலையில் மட்டும் அமல்படுத்தப்பட்ட உரிமையாளர் பெயர் அடங்கிய பெயர் பலகை உத்தரவு, தற்போது ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்று உத்தரவிட்டுள்ளார் யோகி அதித்யநாத்.

உரிமையாளர்கள் பெயர்களை கட்டாயமாக்க யோகி ஆதித்யநாத் முன்மொழிந்துள்ள காரணம், மேலும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. “உணவகங்களின் தயாராகிற உணவில், தற்போது தூய்மை தன்மை குறைந்து வருகிறது. எனவே, உரிமையாளர்களின் பெயர்கள் அவசியம்” என்பது தான் அவர் கூறுகிற காரணம்.

இதனால், கடும் சினத்திற்குள்ளான தலைவர்கள் பலரும், “ஒரு பெயரை வைத்து, ஒரு உணவகத்தின் தூய்மை தன்மையை எவ்வாறு கண்டறிய இயலும்? தூய்மையான உணவு தயாரிப்பவர்கள் குறிப்பிட்ட பெயர்களை உடையவர்களாகதான் இருப்பார்களா?” என்ற கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

எனினும், இது போன்ற கண்டனங்களுக்கு செவி சாய்க்காமல், தனது பிரிவினைவாத கருத்தியலை அமல்படுத்துகிற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் உத்தரப் பிரதேச முதல்வரும், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்.

Also Read: ஆளுநர் ஆர்.என்.ரவியின் மற்றொரு சர்ச்சை பேச்சு! : தேசிய அளவில் குவியும் கண்டனங்கள்!