Politics

தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்தப்போகிறார்களா ? - முரசொலி கேள்வி !

முரசொலி தலையங்கம் (24-09-2024)

ஒரே நாடு -ஒரே நாசம் :

ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக உயர்நிலைக் குழு கொடுத்த அறிக்கையை ஒன்றிய அமைச்சரவை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் சொன்னதை உயர்நிலைக் குழு சொல்கிறது. உயர்நிலைக் குழு எழுதிக் கொடுத்ததை அமைச்சரவை ஏற்கிறது. இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு பழகிப் போன நாடகங்கள்! வாக்களித்த மக்களுக்கு உருப்படியாய் எதையும் செய்யத் தெரியாத ஆட்சியாக மூன்றாவது முறையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.

*திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தார்கள். புதிய இந்தியா பிறந்திருப்பதாக அறிவித்தார்கள்.

*பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்டினார்கள். பூஜையை பிரதமர் மோடியே செய்தார்.

*காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கினார்கள். அவ்வளவுதான். இவை மூன்றும்தான் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.க.வின் சாதனையாகும்.

அழிவை பட்டியலிட்டால், பல பக்கங்கள் வரும். நிறைவேற்றாத வாக்குறுதிகளை பக்கம் பக்கமாக பட்டியலிடலாம். இதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. பொதுசிவில் சட்டம் -- ஒரே நாடு ஒரே தேர்தல் ... இப்படி எதேச்சதிகாரச் சட்டங்களை நிறைவேற்றி தங்களது எண்ணங்களைச் செயல்படுத்துவதில்தான் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியானது குறியாக இருக்கிறது. இதனை அவ்வப்போது பொது- வெளியில் சொல்லிக் கொண்டு, ஏதோ அரசாங்கம் செயல்படுவதைப் போலக் காட்டிக் கொள்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது பா.ஜ.க. அரசு. நாடாளுமன்றத்துக்கும் - சட்டமன்றத்துக்கும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தலாம் என்றும், இந்தத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து தேர்தலை நடத்துவதால், நிறைய பணம் செலவு ஆகிறது என்று காரணம் சொல்கிறார்கள். இவர்களால் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் கூட ஒரே கட்டமாக ஒரே நாளில் நடத்திக் காட்ட முடியுமா? நடத்திக் காட்டி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுவே அவர்களால் முடியாது.

சில மாதங்களுக்கு முன்னால் நாம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். அந்தத் தேர்தலையாவது ஒரே கட்டமாக அவர்களால் நடத்த முடிந்ததா? இல்லை. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாகத் தான் நடத்தப்பட்டது.

*102 தொகுதிகள் -- முதல் கட்டம்

*89 தொகுதிகள் -- இரண்டாம் கட்டம்

*94 தொகுதிகள் -- மூன்றாம் கட்டம்

*96 தொகுதிகள் -- நான்காம் கட்டம்

*49 தொகுதிகள் -- ஐந்தாம் கட்டம்

*57 தொகுதிகள் -- ஆறாம் கட்டம்

*57 தொகுதிகள் -- ஏழாம் கட்டம்-- என்று தான் தேர்தலை நடத்தினார்கள்.

ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 - ஆகிய நாட்களில் தேர்தல் நடந்தது. அதாவது 40 நாட்கள் தேர்தலை நடத்திய இவர்கள் தான் ஒரே நாளில் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தப் போகிறார்களாம். இந்தியாவில் மொத்தம் 23 மாநிலங்கள் உள்ளன. 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. இவற்றில் மொத்தம் 4 ஆயிரத்து 123 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப் போகிறார்களாம்.

“நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் முக்கியப் படி” -- என்று இந்த முடிவை வரவேற்றுக் கருத்துச் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. எது துடிப்பான ஜனநாயகம்? ஆட்சியை ஜனநாயக முறைப்படி நடத்துவதுதான் ஜனநாயகத்தின் முக்கியப் படியாகும். நாடாளுமன்றத்துக்கே வராமல், நாடாளுமன்றத்தில் முக்கியமான எந்த விவாதத்துக்கும் பதில் அளிக்காமல் இருப்பவர் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது கேலிக்குரியது ஆகும். இந்தியா விவசாய நாடாகச் சொல்லப்படுகிறது. விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றினார்கள். ஒன்றரை ஆண்டு காலம் பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தங்கி போராடினார்கள். அதன்பிறகு வேண்டா வெறுப்பாக அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது. சட்டத்தை திரும்பப் பெறும் போதும் எந்த விவாதமும் இல்லை. சட்டத்தை திரும்பப் பெற்ற பிறகும் அது சரியான சட்டம்தான் என்று பொதுவெளியில் பேசினார் பிரதமர். இதுதான் அவர் ஜனநாயகத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும், சட்டத்துக்கும், மக்களுக்கும் தரும் மரியாதை ஆகும்.

இவரெல்லாம் துடிப்பான ஜனநாயகம் பற்றிப் பேசுவதுதான் கடுப்பானதாக இருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது காரிய சாத்தியம் இல்லாதது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு விரோதமானது. மாநிலங்களின் சுயாட்சிக்கு விரோதமானது. கூட்டாட்சித் தன்மைக்கு விரோதமானது. இவை அனைத்தையும் விட குழப்பமானது. இந்திய ஜனநாயக அமைப்பு முறையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே இது கொண்டு வரப்படுகிறது.

Also Read: “சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!